5/20/2009

பாசிசப் புலிகளின் சிதைவு: ஜனநாயக மீட்சிக்கும் இன நல்லுறவுக்குமான மாபெரும் திறவுகோல். -ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி-




பாசிசப் புலிகளின் கட்டமைப்பு முற்றாக சிதைக்கப்பட்டுள்ளது. இதனூடாக புலிகளின் சுமார் 3 தசாப்தகால கொடும்கோன்மை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தாயக சுதந்திரம் என்று கோசமிட்டுக்கொண்டு தாயகத்தையே சின்னாபின்னமாக்கிய, தனது சொந்தமக்களையே கொன்று குவித்த, தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் முழு இலங்கைத் தீவையும் குலைநடுங்கச்செய்த பாசிஸ்ட்டுக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த முடிவானது இலங்கையின் எதிர்கால சந்தததியினருக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். புலிகளது இந்த முடிவுடன் அவர்களது அடக்குமுறைகளுக்கும், அக்கிரமங்களுக்கும் மட்டும் அல்ல தமிழீழப் பெருங்கதையாடல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இலங்கைப் பிரசையும் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டிய ஒரு நிகழ்வாகும் என நாம் கருதுகின்றோம்;. அரசியல்வாதிகள், மாற்று இயக்கங்கள், மனித உரிமைவாதிகள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் என்று சமூகத்தின் அனைத்துவித ஆளுமைகளையும் வெட்டிச் சாய்த்தது இந்த புலிப்பாசிசம். இஸ்லாமியத் தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்து, கிழக்கு மாகாணத்தின் மீது பிரதேச மேலாத்திக்கத்தை திணித்து, அப்பாவிச் சிங்கள மக்களை பலியெடுத்து, கருத்துச் சுதந்திரத்தை மறுத்து, பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் குடித்து, அங்கவீனர்களை ஆயிரக்கணக்கில் உருவாக்கி, இளம்பராயத்தினர்களை குண்டு காவிகளாக மாற்றி குதூகலித்த புலிகளின் தோல்வி தமிழ் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வானது மானிடத்தை நேசிக்கும் அனைவராலும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும். சுமார் 30 வருடகாலம் தமிழ் சமூகத்தின் ஒவ்வொரு பிரசையும் அச்சுறுத்தி, கண்காணித்து, நடமாடும் கைதிகளாக, நடைபிணங்களாக மாற்றிய புலிகளின் சிதைவே எமது தேசத்தின் ஜனநாயக மீட்சிக்கும் இனநல்லுறவுக்குமான மாபெரும் திறவுகோல் என எமது முன்னணி பகிரங்கமாக அறிவிக்கின்றது. இலங்கை வாழ் மக்களிடையே இனவெறியை மூட்டி வௌ;வேறு துருவங்களாக மக்களைக் கூறுபோட்டு வந்த நிலைமை இந்த புலிகளின் முடிவுடன் முற்றுப்பெற வேண்டும் என்பதே எமது அவாவாகும். எந்த மேலாதிக்க கருத்தியலில் இருந்து இந்த பாசிசம் முளைத்ததோ, அந்த மேலாதிக்க கருத்தியலும் புலிகளின் சிதைவுடன் தோற்கடிக்கப்பட வேண்டும். பல்லின, பன்மைத்துவ, மத, பிரதேச, சமூக.... அடையாளங்களும் தனித்துவங்களும் மதிக்கப்பட்டு பன்மைத்துவ கருத்தியல் ஒருமிப்பில் எமது தேச மக்கள் அனைவரும் சரிநிகர் சமனாக வாழும் காலம் நோக்கி முன்னேற இந்த புலிகளின் முடிவு ஒரு பலமான அத்திவாரமாக அமையவேண்டும் என்பதே எமது அவாவாகும். கொடிய இந்த புலிப் பாசிஸ்டுகளை நேருக்கு நேர் முகம் கொண்டு முட்டி மோதி இவர்களின் அழிவை முன்கூட்டியே பறைசாற்றிய கிழக்கிலங்கை வீரர்கள் எமது மதிப்புக்குரியவர்கள். அதேபோன்று இலங்கையின் முப்படையினரது வீரம் மிக்க செயல்திறனும் தியாகங்களும் எமது வணக்கத்துக்குரியன. சுமார் 30 வருடகால புலிகளின் அட்டூழியங்கள், அவதூறுகள், சேறு ப+சல்கள், துரோகப்பட்டங்கள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு ஜனநாயகத்துக்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் மரணித்தும், மரணத்தின் விளிம்பில் நின்று போராடியும் வந்த மாற்றுக் கருத்தாளர்கள், ஜனநாயக விரும்பிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள்..... போன்ற சகலருக்கும், ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினராகிய நாம் தோழமை கலந்த பெருமிதத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இக்கொடிய பாசிசத்தின் முன் வாய்மூடி மௌனித்து மரணித்துப் போக நிர்ப்பந்திக்கப்பட்ட அப்பாவி மக்கள் அனைவருக்கும் பாசிசப் புலிகளுக்கு எதிரான இந்த வெற்றி சமர்ப்பணமாகட்டும்.

ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி.
19-05-2009
kilakku@hotmail.com

0 commentaires :

Post a Comment