5/24/2009

விடுதலைப் புலிகள் இல்லாத இலங்கை




மூன்று தசாப்த காலமாக நாட்டில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களையும், பெறுமதியிடமுடியாத அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் இழந்து இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணமாக இரு ந்த புலிகள் இயக்கம் வேரோடு பிடுங்கப்பட்டி ருக்கிறது. இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை கள் என்ன? போரினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களிலும் நிவார ணக் கிராமங்களிலும் தங்கி யிருக்கும் மக்களுக்கான உதவிகள், அவர்களை மீளக்குடியமர்த்துவது, மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர் பாக தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்படுகிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமானவீ. ஆனந்த சங்கரி,




இதுபற்றி உடனடியாக எதுவும் கூற முடியாது. ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார். சகல இனமக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான தீர்வை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார். அரசாங்கம் உடனடியாக நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். இதற்கு சகல தரப்புக்களினதும் ஒத்துழைப்பும் அவசியமாகும் ஜனாதிபதியும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
பார் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் தங்கியிருக்கும் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 75,000 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் போது அவர்கள் தங்கள் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார் வீ. ஆனந்தசங்கரி.
தமிழ் கட்சிகள் மத்தியில்உடன்பாடுகள் ஏற்படலாம்




பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு ஸ்ரீதரன்




தற்போதைய புதிய சூழ்நிலையில் ஜனநாயக அரசியல் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் சுதந்திரமாக வேலை செய்தவற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 15,20 வருடங்களாக இத்தகையதொரு சூழ்நிலை இருக்கவில்லை. மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் வெவ்வேறு ஜனநாயக அரசியல் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்கள் இக்காலப் பகுதியில் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வந்திருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் வாய்திறக்க முடியாத பயபீதி நிறைந்த சூழ்நிலையொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. இப்போது கலந்துரையாடுவதற்கும், கூட்டம் கூடுவதற்குமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமூக பிரக்ஞை உள்ளவர்கள் மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய தலைமுறையைச் சார்ந்தவர்களும் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே ஜனநாயகத்தை கட்டியெழுப்புவது வெவ்வேறு கருத்து நிலைகளுடன் வாழ்வதற்கான உரிமையை நிர்மாணம் செய்வது என்பன இங்கு முக்கியமான பணிகளாகும்.
ஒரு சமூகம் வளர்ச்சியடைவதற்கு முன்னோக்கிச் செல்வதற்கு அடிப்படையாக இருப்பது ஜனநாயகம், மனித உரிமை என்பனவாகும். இவற்றை பேனுவதனூடாகவே சமூக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும்.
இதைவிட ஆயுத வன்முறை கலாசாரம் முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வன்முறை சாராத அகிம்சை இயக்கம் எமது சமூகத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக உள்ளூரில் தமது விவகாரங்களை தாமே பார்த்துக் கொள்கிறோம் என்று மக்கள் மனப்பூர்வமாக கருதுமளவிற்கு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
அத்தோடு பிரமாண்டமான அளவில் சமூக பொருளாதார அபிவிருத்தி பணிகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். இவையே எமது அடுத்தகட்ட பணிகளாக இருக்க முடியும்.
நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் சிலவேளை சிறியவொரு நாட்டின் சனத்தொகைக்கு அல்லது ஒரு பெரு நகரத்தின் சனத்தொகைக்கு சமனான தொகையினராக இருக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர்கள் மனிதர்கள் அனுபவிக்கக் கூடாத துன்பங்களையெல்லாம் அனுபவித்து இழப்புக்களை சந்தித்து உறவுகளை இழந்து நிர்க்கதியாக இந்த முகாம்களுக்கு வந் திருக்கிறார்கள். அவர்களின் உடற்காயங்களும், மனக்காயங்களும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.
இவர்கள் நலன்புரி நிலையங்களிலேயே நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே தொழில் வசதி எதுவுமின்றி வாழ்ந்துவிட முடியாது.
அவர்கள் முகாம் வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை அசெளகரியங்களை எதிர்நோக்குகிறார்கள். பலபற்றாற்க்குறைகள் அவர்களுக்கு இருக்கின்றன. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்கள் தமது சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான சூழ்நிலையில் அவர்கள் மீளக்குடியேற வேண்டும். கண்ணிவெடிகள் அகற்றும் வேலைகள் இந்திய தொண்டு நிறுவனத்தின். உதவியுடன் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களில் மக்கள் மீள குடியேற்றப்படுவார்கள் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அத்தகையவொரு சூழ்நிலையில் மக்கள் சொந்தக் காலில் நிற்பதற்கும் தமது தொழில்களை கவனிப்பதற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தமது வீடுகளையும், நிலங்களையும் புனரமைப்பு செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.
கெடுபிடிகள் இல்லாத சூழ்நிலையொன்று அவர்களுக்குக் கிட்டும் என நம்புவோம்.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் தமது விவகாரங்களை தாமே கவனித்துக் கொள்வதற்கான அரசியல் அதிகாரக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு எமது ஆலோசனைகளை முன் வைத்துள்ளோம்.
தவிர 13வது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துவதற்கான செயலணிகள் ஆலோசனை குழுக்களிலும் பங்கு பெறுகிறோம்.
தவிர இலங்கை பல்லினங்களின் தேசமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மிளிர வேண்டும் என்று இடையறாது முயற்சி செய்கிறோம்.
இனிமேலும் இனப்பிரச்சினை தீர்வை தாமதித்துச் செல்வதற்கு எத்தகைய காரணமும் இல்லை. மிகத் துரிதமாக ஓர் அரசியல் தீர்வினூடாகவே மக்களின் மனங்களில் 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காயங்களை ஆற்ற முடியும் என நம்புகிறோம். உண்மையான இதயசுத்தியுடனான அதிகாரப் பகிர்வே அம்மக்களின் அவ நம்பிக்கைகளையும் விரக்தியையும் போக்கும்.
ஏற்கனவே கிழக்கு மாகாணத்திற்கு 13வது திருத்தச் சட்டமூலத்தின் கீழான அதிகாரங்கள் முழுமையாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்ற மனக்குறை இருக்கிறது.
எமது நிலைப்பாடு தெளிவானது. 13 வது திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் அர்த்த புஷ்டியான யோசனைகள் வரை நாம் முன்னேற வேண்டியிருக்கிறது.
துரதிஷ்டவசமாக த.தே.கூ. புலிகளின் முகவர் அரசியல் கதம்ப கூட்டாகவே இதுவரை செயற்பட்டு வந்திருக்கிறது. இனிமேல் அவர்களின் பிடி இங்கு இல்லாததால் இவர்களுக்குள் அபிப்பிராய மாறுபாடுகள் பிளவுகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. குறிப்பிடத்தகுந்தவொரு குழுவினர் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு செயற்பாடுகளுக்கு பங்களிக்க முன்வரலாம்.
ஜனநாயக வழிக்குத் திரும்பிய கட்சிகள், மாற்று அரசியல் கொள்கை கொண்ட தமிழ் கட்சிகளிடையே ஒரு மித்த கருத்துக்கள் இல்லாத நிலையில் மக்கள் நலனை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் நீங்கள் முன்னெடுக்கவுள்ள அரசியல் நடவடிக்கைகள் என்ன?
மக்கள் தற்போது சந்தித்திருக்கும் மனிதப் பேரவலம் அதிகாரப் பகிர்ந்தளிப்புத் தொடர்பில் பல்வேறு தமிழ் கட்சிகளுக்குமிடையே ஒரு உடன்பாடு அல்லது ஒருமித்த கருத்து நிலவுவதற்கான குறைந்தபட்ச சாத்தியங்கள் தற்போது இருக்கின்றன. எல்லா விடயங்களிலும் ஒருமித்த கருத்து என்பது யதார்த்தமானதல்ல.
தமிழ் கட்சியினரும், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இடதுசாரி அரசியல் கட்சிகளும் மனித பேரவலத்தைச் சந்தித்த மக்களின் துயர்துடைப்பு பணிகளிலும் மறுசீரமைப்பு பணிகளிலும், அதிகாரப் பகிர்விற்கான கட்டமைப்பை உருவாக்குவதிலான கருத்தாடல்களிலும் ஒன்றாக பணி புரியமுடியும். தெற்கின் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த ஜனநாயக சக்திகளும் கல்விமான்களும் கூட இதில் இணைத்துக் கொள்ளப்பட முடியும்.
அரசுடன் பேசி மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதமான செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
குறிப்பாக இந்தியாவும், சர்வதேசமும் மனித பேரவலம் தொடர்பிலும் அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் முன்னெப்போதையும் விட அதிகூடிய கரிசனையை கொண்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“நொந்து நொறுங்கியிருக்கும் மக்களிடம் எமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும்







<

மக்கள் விடுதலை முன்னணி எம்.பி. சந்திரசேகரன்







விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்களை ஆயுதமுனையில் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றும் ஆரம்ப முதலே ஜே. வி. பி. உறுதியாகக் கூறி வந்திருக்கிறது. இந்த அரசு இதைச் செய்திருக்கிறது. முப்பது வருடங்களாக ஆயுத கலாசாரத்தை இலங்கையில் வளர்த்து வந்திருக்கும் விடுதலைப் புலிகள் முற்ற முழுதாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக இருந்தது என்பதற்கு இராணுவம் கைப்பற்றியிருக்கும் ஆயுதத்தொகையே சான்று பகரும். இது ஒரு முடிவுக்கு வந்திருப்பதால் இந்த யுத்தமும், பயங்கரவாதமும் அடுத்த தலைமுறைக்கும் நீட்டிச் செல்லப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கிறது.
புலிகளால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று பிரிவினைவாத அணி. இரண்டாவது பயங்கரவாத அணி. இப்போது பயங்கரவாத அணி ஒழிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதம் அரசியல் ரீதியாகக் களையப்படவேண்டும்.
விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டதும் நாடெங்கும் ஒரு பேரெழுச்சி ஏற்பட்டது. மக்கள் உவகையுடன் ஆர்ப்பரித்தெழுந்தனர். வீதிகளில் வெடி கொளுத்தி, பால்சோறு படைத்து மகிழ்ந்தனர். இது மிக இயல்பானது. என்றாலும் கூட நாம் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொண்டிருந்தோம். ஊடக சந்திப்பு ஒன்றில் இது தொடர்பாகக் கூறியுமிருந்தோம். இது சிங்கள மக்கள் அடைந்த வெற்றியாகவோ, இனவாத சிந்தனையை வளர்க்க உதவுவதாகவோ அமைந்துவிடக்கூடாது என்றும் இலங்கை வாழ் சிறுபான்மையினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் கூறி இருந்தோம். சிங்கள- தமிழ் மக்கள் மத்தியில் தேசிய உணர்வைக் கட்டி எழுப்புவதற்கான சந்தர்ப்பமாகவும் கொள்ளப்படவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. ஏனெனில் இனிமேலும் தமிழ்- சிங்கள மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை நீடித்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது. பயங்கரவாதத்தின் முடிவில் இனங்களுக்கு மத்தியில் பேதங்கள் களையப்பட்டு தேசிய சிந்தனை கட்டி எழுப்பப்பட வேண்டியது மிக முக்கியமானது. இனவாத, மதவாத, பிரதேசவாத சிந்தனைகளுக்கு மாற்றாக இன ஐக்கிய சிந்தனை முன்வைக்கப்படுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
இதே சமயம் புலிகளின் கலாசாரம் மட்டும் தெரிந்த, சிங்கள மொழி அறியாத, தென் பகுதி மக்கள் அறிந்திராத அதே சமயம் யுத்தத்தில் சிக்கி வாடிவதங்கி இன்று அகதி முகாம்களில் நொந்து நொறுங்கிப் போயிருக்கும் நம் நாட்டுப் பிரஜைகளான தமிழர்களிடம் உண்மையான சகோதரத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். வெளிக்காயங்கள் மாறலாம். உற்காயங்கள் சுலபமாக மாறாது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது பொருள், உயிர் இழப்பு மட்டுமல்ல. அம்மக்களின் வீரம், கலாசாரம், துணிச்சல், கல்வி பாரம்பரிய பெருமைகள் என்பனவும் சிதைக்கப்பட்டுள்ளன. இவையும் இச்சந்தர்ப்பத்தில் புரிந்துகொள்ளப்படவேண்டும்.
கடந்த அறுபது வருடங்களாக ஏற்பட்டிருக்கும் இடைவெளி நிரப்பப்பட்டாக வேண்டும். அரசியல் தலைமை, அரசியல் உறுதிப்பாடு என்பன கட்டி எழுப்பப்பட வேண்டிய அவசியம் உள்ளது. மீண்டும் அழிவுப் பாதையை இவர்கள் தெரிவு செய்யாமல் இருக்கும் வகையில் மாற்று வழிகள் கைகொள்ளப்படவேண்டியதன் அவசியமும் உள்ளது.
இப்போது உடனடியாக செய்யப்பட வேண்டிய வேலைகள் உள்ளன. அவர்கள் வெகு சீக்கிரமாக தத்தமது இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். பின்னர் அப்பிரதேசங்கள் துரித அபிவிருத்திக்குள்ளாக்கப்பட வேண்டும். ஜனநாயக வழிமுறைகள் அங்கெல்லாம் நிலை நிறுத்தப்பட வேண்டும். அப்போது தான் அம்மக்கள் சுதந்திரமாகவும், சுயமாகவும் சிந்தித்து முடிவெடுக்கக்கூடியவர்களாகவும் தமது அரசியல் அபிலாஷகளை வெளிப்படுத்துக்கூடியவர்களாகவும் தம்மை நிலை நிறுத்திக்கொள்வார்கள்.



0 commentaires :

Post a Comment