5/12/2009

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீட மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்


கடந்த இரு வாரங்களாக விரிவுரைகளைப் பகிஷ்கரித்து வரும் கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான(மருத்துவம்) பீட மாணவர்கள் இன்று நண்பகல் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு நகரிலுள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக கூடிய மாணவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பீடத்தின் மாணவ ஆலோசகராக சேவையாற்றும் விரிவுரையாளருக்கும் மாணவர்களுக்குமிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக இம்மாணவர்கள் கடந்த 23 ஆம் திகதி முதல் விரிவுரைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்குறிப்பிட்ட விரிவுரையாளரை வேறு பீடத்திற்கு இட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைப் பிரதான கோரிக்கையாக மாணவர்கள் முன் வைத்துள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்ட போதிலும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை.நிர்வாகம் பக்க சார்பாகவே தீர்மானம் எடுக்க முற்பட்டதாகவும் மாணவர் பேரவை குற்றம் சுமத்துகின்றது.இதன் காரணமாகவே இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தாம் முன்னெடுக்க வேண்டியேற்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட பீடத்தில் மருத்துவம் மற்றும் தாதிகள் பட்டதாரி மாணவர்கள் தொடர்ந்தும் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல்கலைக்கழகத்தில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


0 commentaires :

Post a Comment