கிழக்கு மாகாணத்தில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட பிரதேசங்கள் உடனடித் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடிய இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டக்ளஸ்கே தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கடந்த ஆறு மாத காலத்திற்கு முந்திய நிலைமையுடன் ஒப்பிடும்போது பெரும் முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட பிரதிநிதிகள் குழு கிழக்கு மாகாணத்திற்கான இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் மட்டக்களப்பு தொப்பிகல வீதியில் உள்ள திஹிலிவட்ட பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இக்கருத்துக்களைக் குறிப்பிட்டார்.
இக்குழுவினர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அண்மைக்கால அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பிரதேசங்களைப் பார்வையிட்டனர்.
இதன்போது டக்ளஸ்கே மேலும் கருத்துத் தெரிவிக்கையில் :-
மீளக் குடியமர்ந்த மக்களுக்கான உடனடியத் தேவைகளை நிறைவேற்றும் பணியில் அரசுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டிருந்தது. தற்போது அந்த மக்களது வாழ்வில் பெரும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. இம்மக்கள் தமக்கான வாழ்வாதாரத் தொழிலை தாமே தேடிக் கொள்ளக்கூடிய சுமுக நிலை உருவாகியுள்ளது.
எனினும், பாதுகாப்பு ரீதியிலான சில கட்டுப்பாடுகள் இன்னும் இருப்பதை அறிய முடிகிறது.
இவர்கள் தத்தமது தொழில் இடங்களுக்கு சுதந்திரமாக எந்நேரமும் சென்றுவரக் கூடிய நிலை உருவாக வேண்டும்.
கிழக்கில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட நிறுவனம் கற்றுக்கொண்டுள்ள அனுபவங்களைக் கருத்திற்கொண்டு வடக்கில் தமது செயற்றிட்டங்களை அமுல்படுத்தவுள்ளதாகவும் கூறினார்.
0 commentaires :
Post a Comment