எஞ்சியுள்ள புலிகள் அடுத்துவரும் ஐந்தாறு நாட்களுக்குள் தம்பிடியிலுள்ள சிவிலியன்களை விடுவிப்பதுடன், ஆயுதங்களையும் கைவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடைய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று எம்பிலிப்பிட்டியவில் தெரிவித்தார். எந்தவொரு சிவிலியனும் துப்பாக்கி ரவைகளால் உயிரிழக்க இடமளிக்க முடியாது. அதன் காரணத்தினால் தான் கனரக ஆயுதங்கள் மற்றும் விமானங்களின் பாவனை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள சிவிலியன் கள் தமிழ் மக்கள் என்றாலும் அவர்களும் எமது மக்களே. அவர்களைப் பாதுகாப்பதும் எமது கடமையே என்றும ஜனாதிபதி குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 104 பிறந்த தின நினைவு வைபவம் மற்றும் சந்திரிகா குளம் அமைக்கப்பட்டு ஐம்பது வருடங்கள் பூர்த்தியானதையொட்டியும் இடம்பெற்ற வளவை மரபுரிமை நிகழ்ச்சியின் நிறைவு நாள் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வைபவத்தின்போது 60 மில்லியன் ரூபா செலவில், எம்பிலிப்பிட்டிய நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகாவலி புத்தி மண்டபய கேட்போர் கூடத்தை திறந்து வைத்ததுடன், பெளத்த தேரர்கள் உட்பட பிரதேச வாசிகளுக்கும் காணி உரிமை பத்திரங்களையும் ஜனாதிபதி வழங்கினார்.
இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகள் அன்று 15 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை தமது பிடியில் வைத்திருந்தனர். இவை அவர்களுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டிருந்தன. இப்போது அவர்கள் ஐந்து சதுர கிலோ மீட்டருக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அதுவும் எமது பாதுகாப்பு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறது.
புலிகளின் பிடியில் சிக்கி இருப்பவர்கள் தமிழ் மக்கள் என்றாலும் அவர்களும் எமது மக்களே. அவர்களைப் பாதுகாப்பதும் எமது கடமையே. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை விடவும் எமது மக்களின் பாதுகாப்பில் எமக்கு அக்கறையுள்ளது. எந்தவொரு சிவிலியனும் துப்பாக்கி ரவைகளால் உயிரிழக்க இடமளிக்க முடியாது. அதனை எம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இதன் காரணத்தினால் தான் கனரக ஆயுதப் பாவனையையும் விமானப் பயன்பாட்டையும் நிறுத்தியுள்ளோம்.
இருந்தும் எங்கிருந்தோ வருபவர்கள் நாம் கனரக ஆயுதங்களையும், தாக்குதல் விமானங்களையும் பாவிப்பதாகக் கூறுகின்றனர். நாம் அவற்றைப் பாவிப்பதை நிறுத்தியுள்ளோம் என்பதை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.
ஈராக்கிலும், ஆப்கானிலும் எவ்வாறு குண்டுகளைப் பொழிந்தார்கள் என்பதை நாமறிவோம். ஆனால், அவற்றை அவர்கள் வேறுவிதமாகப் பார்க்கின்றனர். முழு உலகமும் எம்மையே பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை நாமறிவோம்.
எமது படையினர் மனிதாபிமான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் அப்பாவி தமிழ் மக்களை எமது படை வீரர்கள் மனிதாபிமான அடிப்படையிலேயே பார்க்கின்றார்கள். கவனிக்கிறார்கள். இதற்கு தயா மாஸ்டரின் கூற்று ஒன்றே நல்ல சிறந்த உதாரணமாகும். ‘முதுமை அடைந்துள்ள பெற்றோரைத் தம்பிள்ளைகள் எவ்வாறு அன்புடன் எடுப்பார்களோ அவ்வாறே படையினரும் தன்னை அரவணைத்ததாக அவர் கூறியுள்ளார். புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள சிவிலியன்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
எந்த நாட்டிலிருந்து என்ன பிரதிநிதி வந்தாலும் பரவாயில்லை. அவர்கள் ஒரு பக்கமாகப் பார்த்து செயற்படக்கூடாது. புலிகளின் பொய் பிரசாரத்தை நம்பக்கூடாது என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கின்றோம். பயங்கரவாதத்திற்கு உதவுவதால் முழு உலகின் ஆழிவுக்கே வழிவகுக்கும். முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஆர்.பிரேமதாஸ புலிகளுக்கு ஆயுதம், பணம், வாகனம் என எல்லாம் கொடுத்தார். அப்படியிருந்தும் அவரைப் படுகொலை செய்தனர். புலிகள் தங்களுக்கு உதவிய முன்னாள் இந்தியப் பிரதமரைக் கூட படுகொலை செய்தனர். இதுவே பயங்கரவாதத்தின் சுபாவம் இதனை எல்லா தலைவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
புலிகளுடன் நாம் யுத்த நிறுத்தத்திற்குப் போகவுமில்லை. அதற்குப் போகப்போவதுமில்லை. அதற்கு நேரமும் கிடையாது. புலிகள் தம்பிடியிலுள்ள சிவிலியங்களையும் அடுத்துவரும் ஐந்தாறு நாட்களுக்குள் விடுவிப்பதுடன் ஆயுதங்களைக் கைவிட்டு எமது பாதுகாப்பு படையினரிடம் சரணடைய வேண்டும். அதற்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளது.
ஊடகங்கள் உண்மையை உலகிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
எதிர்க்கட்சியும் இனியாவதுமக்களின் நன்மை கருதி உண்மையாக செயற்பட வேண்டும் என்றார்.
இவ்வைபவத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சமல் ராஜபக்ஷ, ஜோன் செனவிரட்ன, பவித்ரா வன்னியாராச்சி, சுமேதா ஜீ ஜயசேன, மஹிந்த அமரவீர, ஜகத் புஸ்பகுமார, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் சனி ரோஹன கொடித்துவக்கு உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment