5/11/2009

இலங்கையின் வடக்கே கடும் தாக்குதல்:378 பேர் பலி, 1122 பேர் காயம் - அரச மருத்துவர் தகவல்


இலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்கால் பகுதியில் சனிக்கிழமை இரவும், இன்று ஞாயிற்றுகிழமை பிற்பகல் வரையும் இடம்பெற்ற கடும் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதலில் 378 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருக்கும் அரச மருத்துவர் தமிழோசையிடம் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் 1122 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கி வரும் தற்காலிக மருத்துவமனைக்கு வந்துள்ள 378 உடல்களில், 106 உடல்கள் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுடையது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு வந்தவர்கள் மேலும் பல சடலங்கள் வீதிகளில் இருப்பதாக தம்மிடம் கூறியதாகவும் அந்த அரச மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
தாக்குதலில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை - இலங்கை அரசு
இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபக்ஷ்
இலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலரிடம் தமிழோசை பேட்டி கண்டது.
தமிழோசை: இன்று 106 சிறுவர்கள் உட்பட 378 கொல்லப்பட்டதாக செய்தி வந்துள்ளது. அந்தப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டாது, வான்வழித் தாக்குதல்கள் இடம் பெறமாட்டாது என்று அரசாங்கம் கூறியிருந்தும் இத்தகைய செய்தி வந்துள்ளது, இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
கோத்தாபய ராஜபக்ஷ: புலிகளின் கடைசிக் கட்டம் இது. தாங்கள் தப்ப எந்தத் தில்லுமுல்லுகளையும் அவர்கள் இந்த நேரத்தில் செய்வார்கள். அவர்களுக்கு இப்போது உள்ள ஒரே வழி, அரசாங்கத்தின் மீது அவதூறைச் சுமத்துவது அல்லது சர்வதேச அழுத்தத்தைக் கொண்டு வருவது, அவ்வளவுதான். அதனால் தான் அவர்களின் பிரச்சார இயத்திரம் இப்படியான புரளிகளைக் கிளப்பி 350, 200, 2000 என்று கதை கட்டி விட்டுள்ளது. எனவே இது விடுதலைப் புலிகளின் ஒரு பிரச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழோசை: 378 பேரின் சடலங்கள் வந்துள்ளன, அதில் 106 சிறுவர்கள்,1122 பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசாங்க மருத்துவரே தெரிவித்துள்ளாரே?
கோத்தாபாய: அவர் அரசாங்க மருத்துவர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் இருப்பது புலிகளின் தலைமைப்பீடமும், போராளிகளும், ஆயுதங்களும் செறிந்துள்ள மூன்றரை சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுடைய மிகச் சிறிய இடம். இதற்குள் இருந்து கொண்டு அவரால் முற்று முழுக்க உண்மையைப் பேசிவிட முடியும் என்று புத்தியுள்ள எவராலும் நம்ப முடியாது.
தமிழோசை: நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள். புலிகள் ஒன்று சொல்கிறார்கள். இருவரும் சொல்வதை விட, தனிப்பட்ட முறையில் அங்கு சென்று பார்த்து உண்மையைச் சொல்ல செய்தியாளர்களை நீங்கள் அங்கு அனுமதிப்பது தானே? ஏன் தடுக்கிறீர்கள்.
கோத்தாபாய: செய்தியாளர்கள் உண்மையைச் சொல்ல நாங்கள் ஒன்றும் தடுக்கவில்லை. புலிகள் பகுதியிலிருந்து தப்பி வந்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கும் முகாம்களுக்குப் போய்த் தனிப்பட்ட முறையில் செய்திகளை அறிய வழிவிட்டிருக்கிறோம். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிற இடத்தை விட்டு, சிறிதளவு பேர் இருக்கிற இடத்தில் போய் உண்மையை அறியப் போகிறேன் என்கிறார்கள்.
தமிழோசை: அந்த முகாம்களுக்குக் கூடப் பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தின் மூலம் தானே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சுதந்திரமாகப் போக அனுமதிக்கப்படுவதில்லையே.
கோத்தாபய: ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அங்கே என்ன திருவிழாவா நடக்கிறது? வேடிக்ககை பார்க்க? அங்கே முக்கியமான வேலைகள் நடந்து கொண்டுள்ளன. அவை பாதிப்படைய அனுமதிக்க முடியாது. அங்கு இயங்கும் சர்வதேச உதவி அமைப்புகள் கூட குழப்பம் வேண்டாம், அனைத்தையும் ஒழுங்கு செய்யுங்கள் என்கின்றன. அதனால் தான் நாங்கள் ஏற்பாடுகளைச் செய்கிறோம். முகாமுக்குப் போனவுடன் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கிறோம்

0 commentaires :

Post a Comment