5/06/2009

ஈழவிடுதலைக்காய் ஈன்ற தாயின் மடியில் புலிகளின் கொலையில் 28.08.1952 06.05.1986 வரலாற்றுநாயகன் திரு சு. ஸ்ரீசபாரத்தினம்

23வது நினைவு அஞ்சலி

ஒரு விடுதலைப்போராட்டத்தையே வீணாக்கி ஈழத்தமிழினத்தின் இன்றைய இன்னல்களுக்கே முழுமுதற்காரணமாகி நிற்கும் விடுதலைப்புலிகளால் படுகொலைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர், தமிழீழ மக்களின் தனிப்பெரும் தளபதி, அமரர் சு.ஸ்ரீசபாரத்தினம் உட்பட 800க்கும் மேற்பட்ட போராளிகளும் அவர்கள் நேசித்த பொதுமக்களும் கொல்லப்பட்டு அறம் அறுந்து, அதர்மம் தலைதூக்கி, தர்மமும் தமிழினமும் தலைகுனிந்து மீளாத்துயரில் மீண்டும் ஒரு ஆண்டு; ஆறாத்துயரில் அழுகிறது ஈழம்
அண்ணலே! எம் மண்ணில் நீ மனிதனாக வாழ்ந்தபோது, மனிதநேயமும் எம் மண்ணில் மனிதரோடு வாழ்ந்தது. நீதி தேவதையும் எம் மண்ணில் நிரந்தரமாய்க் குடி புகுந்தாள். ஆட்சியாளரின் அக்கிரமங்களுக்கிடையிலும், உன்னையும் உன் தோழர்களையும் நம்பி எம் மக்களும் எம் மண்ணில் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.
தான் ஒருவனே தலைவனாக வேண்டும் என்ற தவறான கொள்கையிலே தவறாது நின்றதினால் ஈழத்தமிழினத்தின் இன்றைய இன்னல்களுக்கே யாதுமாகி நிற்கும் விடுதலைப்புலிகளினால் எம் மண்ணில் வைத்து நீயும் எம் தோழர்களும் மாய்க்கப்பட்ட அந்ந நாட்களை எண்ணும்பொழுது, ஐயகோ எம் இதயமே ஒருமுறை இயங்க மறுக்கிறது.
சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க துடித்துநின்ற எம் போராளிகளை தெருத்தெருவாய் ரயர் போட்டு உயிரோடு கொளுத்திவிட்டு அவர்கள் வேதனையில் இவர்கள மகிழ்ந்தனரே. அப்போதே மரித்துப்போனது எம் மண்ணிலிருந்து மானிடமும்தான். வீதிவீதியாய் அன்று எம் வீரமறவர்கள் தீயிலே கருக்கப்பட்ட அந்த நாட்கள்தான் ஆண்டவனே, நீ இருக்கின்றாயா என்று அறிஞர்கள் கூட அங்கலாய்த்த நாட்கள். அன்று. புலிகள். அடித்தும், வெட்டியும், சுட்டும், ரயர் போட்டு உயிரோடு கொழுத்தியும் கொன்றொழித்தது எம் போராளிகளை மட்டுமல்ல. எம் இனத்தின் போராட்டத்தையும்தான்.
உடலிலே பற்றிய தீயால் அன்று வீதிகளில் வீறிட்டு அலறி அடங்கியது எம் போராளிகளின் உயிர்கள் மட்டுமல்ல. எம் இனத்தின் விடுதலைப்போராட்டத்தின் உயிரும்தான். தெருத்தெருவாய் தம் பிள்ளைகள் தீயிலே பற்றி எரிந்த போது, பற்றி எரிவது அவரக்ளைத் தாம் பத்து மாதம் சுமந்த வயிறுந்தான் என்று பதறித் துடித்தார்களே எம் பத்தினித்தாய்மார்கள். அடிவயிற்றிலே அடித்து அலறியபடி அள்ளி எறிந்தார்களே சாபங்களை இந்தக் கொலைகாரர்களை நோக்கி. அன்றுதான் எம் மண்ணிலிருந்து மனிதநேயமும் மறைந்து போனது, நீதிதேவதையும் எம் மண்ணை விட்டு நிரந்தரமாய்க் குடி பெயர்ந்தாள்,
ஸ்ரீ அண்ணா உன் மீது வைத்த நம்பிக்கையில், மகிழ்ச்சியோடு வாழ்ந்த எம் மக்களுக்காய், எம் மண்ணில் நின்று நீ போராடியபோது, எம் மண்ணை விட்டு நீ மறைக்கப்பட்டதினால், எம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நாம் கண்டுகொண்ட நம்பிக்கையும், எம் கண்ணை விட்டு மறைந்து போனது. நீயும், உன்னோடு கொல்லப்பட்ட எம் தோழர்களும் இன்று எம்மோடு இருந்திருந்தால், எம் மக்கள் இன்று நிம்மதியாய் வாழ்ந்திருப்பர். எம்மினத்தின் துர்ப்பாக்கியம்,துப்பாக்கிக் குண்டுகளால் தொலைத்துவிட்டனர் உன்னை. உன் மறைவுக்குப்பின் உன் வெற்றிடம் வெற்றிடமாகவே இருக்கிறது. உன் வெற்றிடத்தோடு நீதியான ஒரு தலைவனுக்காய், நேர்மையான ஒரு வழிகாட்டிக்காய், பாசமான ஒரு பண்பாளனுக்காய் எம் தேசம் காத்துக்கொண்டிருக்கிறது.
மறைந்துபோன மனிதநேயம் எம் மண்ணிற்கு திரும்பிவர, எம் மக்களின் மறந்துபோன மகிழ்ச்சியும் நிறைந்து வர, நீதிதேவதையும் எம் மண்ணுக்கு மீள் குடிவர, கண்காணாத நம்பிக்கையும் எம் கண்ணுக்குத்தெரிய, நீ மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து வரவேண்டும். அதுவரைக்கும் உன் தூயசிந்தனையையும், தொலைநோக்குப்பார்வையையும் நடைமுறையில்க் கொண்டுவர, உன் நல்லாசி வேண்டி கனத்த இதயங்களோடு இருபத்திமூன்று ஆண்டுகளாய் காத்துக்கிடக்கின்றோம்.
அன்று களத்திலே வைத்து முதுகிலே குத்தப்பட்ட உந்தனுக்கும், உன்னோடு சேர்த்து அன்று மனிதநாகரிகமே வெட்கித் தலை குனியும் வண்ணம்; கொல்லப்பட்ட எண்ணூறுக்கும் மேற்பட்ட போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் மீண்டும் ஒருமுறை எம் வீரவணக்கங்களை சமர்ப்பிப்பதோடு புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மாற்று இயக்க போராளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம்.
மக்களையும் மண்ணையும் உண்மையாய் நேசித்து,
உங்கள் நல்லாசிக்காய்க் காத்திருக்கும் புலம்பெயர்ந்து வாழும்
தமிழீழ விடுதலை இயக்க (டெலோ) உறுப்பினர்கள்.
புலம்பெயர் ரெலோ தோழர்கள் சார்பில் திரு வெற்றிp (ளறளைள) அவர்களால் 4மே 2009ல் வெளியிடப்பட்டது.


0 commentaires :

Post a Comment