எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்து தமிழ் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழியல் வித்தகர் என்ற பட்டமும், தமிழியல் விருதும் பொற்கிழியும் வழங்கி கெளரவிக்கவுள்ளது.
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு உரமாய் நின்றுழைத்த மூத்த படைப்பாளிகள் இருவர் தமிழியல் வித்தகர் பட்டத்துடன் ரூபா பதினையாயிரம் பொற்கிழியும் இராமகிருஷ்ணா கமலநாயகி தமிழியல் விருதும் வழங்கி கெளரவிக்கப்படுவர்.
2008ம் ஆண்டில் வெளிவந்த 7 சிறந்த நூல்களுக்கு தலா ரூபா பத்தாயிரம் பொற்கிழியுடன் புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன், புரவலர் சீ. ஏ. இராமஸ்வாமி, நாவலாசிரியை பவளசுந்தரம்மா, கல்விமான் க. முத்துலிங்கம் செந்தமிழ்ச்செல்வர் சு. ஸ்ரீகந்தராசா, கலைஞர் ஓ. கணபதிப்பிள்ளை, புரவலர் ந. ஜெகதீசன் ஆகிய ஏழு பேர் பெயரில் தமிழியல் விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதிப்பு, அட்டை வடிவமைப்பு ஓவியத்திற்கான சிறப்பு விருதுகளும் வழங்கப்படும்.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற இலங்கையைத் தாயகமாகக் கொண்ட படைப்பாளிகள் 2008 ஜனவரியிலிருந்து டிசம்பர் 31 திகதி வரை வெளிவந்த நூல்களைத் தேர்வுக்காக நூலின் ஐந்து பிரதிகளுடன் ஓ. கே. குணநாதன், மேலாளர் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் இல. 64 கதிர்காமர் வீதி அமிர்தகழி, மட்டக்களப்பு என்ற விலாசத்திற்கு 31-04-2009 க்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், நாடகம், இலக்கிய ஆய்வு, விமர்சனம், மொழிபெயர்ப்பு உட்பட பல்துறைசார்ந்த நூல்களை அனுப்பி வைக்கலாம்.
தேர்வுக்காக வந்து சேரும் நூல்களிலிருந்து சிறந்த 7 நூல்கள் நீதியானதும், சுதந்திரமானதுமான நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்படும்.
இதற்கான விருதுகளை வாசிப்பு வாரத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment