வன்னியில் யுத்த அகதிகளாக இடம் பெயர்ந்து வவுனியா பிரதேசத்திலுள்ள நிவாரண கிராமங்களிலும் இடைத் தரிப்பு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளில் இணைந்து கொள்வதற்காக இன்று காத்தான்குடியிலிருந்து சுமார் 50 பேர் கொண்ட குழுவொன்று பயணமானது.அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி விடுத்த வேண்டுகோளின் பேரில் காத்தான்குடி நகர சபை மற்றும் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சமையல்காரர்களும் அவர்களது உதவியாளர்களும் என 50 பேர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். நிவாரணக் கிராமங்களிலும் இடைத்தரிப்பு முகாம்களிலும் தங்கியிருந்து சமையல் வேலைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். இவர்களை வழி அனுப்பும் நிகழ்வில் உரையாற்றிய காத்தான்குடி நகர சபைத் தலைவர் யு.எல்.எம். முபீன், "நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேருக்கான உணவைச் சமைத்து பொதியிட்டு வழங்கும் நிவாரணப் பணிகளில் தொண்டர் அடிப்படையில் இவர்கள் ஈடுபடுவார்கள். குறைந்தது 5 நாட்கள் இக்குழுவினர் தங்கியிருந்து தமது நிவாரணப் பணிகளைப் பூர்த்தி செய்வர். அதன் பின் அடுத்த குழுவினர் அங்கு அனுப்பி வைக்கப்படுவர்" என்று குறிப்பிட்டார்.இந்நிகழ்வில் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஐ.எம். சுபைர், முஸ்லிம் வர்த்தகச் சங்கத் தலைவர் ஏ.எல்.எம். கலீல் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment