4/12/2009

லிபிய ஜனாதிபதி பாராட்டு


பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள அனுபவம் முழு உலகுக்கும் ஒரு முன்னுதாரணமாகும் என லிபிய ஜனாதிபதி கேர்ணல் முஅம்மர் கடாபி தெரிவித்துள்ளார்.
லிபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே லிபிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இரு தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு லிபியாவிலுள்ள விசேட அரச தலைவர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பின்போது, உலகிலேயே கொடிய பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் இலங்கை அரசாங்கம் பெற்றுள்ள அனுபவங்களைத் தெரிந்துகொள்வதற்கு லிபிய ஜனாதிபதி ஆர்வம் காட்டினார்.
இலங்கை, முழு உலகுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்திட்டத்தின் வெற்றிகரமான முடிவுக்கு அண்மித்துள்ளதோடு, துரிதமான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தையும் ஆரம்பித்திருப்பதையிட்டு இலங்கை ஜனாதிபதிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்த தமது அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கும் என்றும் லிபிய ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
இலங்கை மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுப்பதற்கும் வடபகுதி மக்களின் மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இச்சந்திப்பின்போது லிபியத் தலைவருக்கு விளக்கிக் கூறினார்.
இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய, லிபிய நாட்டில் ஒரு லட்சம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க லிபியா முன்வந்துள்ளது.இதேவேளை, இந்த வருட இறுதிக்குள் இரு நாடுகளுக்குமிடையில் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் லிபிய சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு கூடுதல் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


0 commentaires :

Post a Comment