4/17/2009

உள்ளுராட்சி மன்ற திருத்த சட்டம் - கிழக்கு மாகாணசபையின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் பாராளுமன்றம் -மீன்பாடும் தேனாடான்- -


1987 ம் ஆண்டு 15 ம் இலக்க உள்ளுராட்சி மன்ற கட்டளை சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய பாராளுமன்றம் முயன்று வருகின்றது. மாநகரசபை, நகரசபை மற்றும் பிரதேசசபைகளை கட்டுப்படுத்தும் இச்சட்டத்தில் சில மாற்றங்களை செய்வதற்கு ஆளும் கட்சி முடிவு எடுத்ததன் அடிப்படையிலேயே மேற்படி முயற்சி எடுக்கபப்ட்டுள்ளது. இத்திருத்தத்தினை மேற்கொள்ள பாராளுமன்றில் மூன்றில் இரண்டு மடங்கு ஆதரவு தேவையாகும். கடந்த ஆண்டு நவம்பர் 21 ம் திகதி மேற்படி சட்டதிருத்தம் பிரஸ்தாபிக்கப்;பட்ட போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை. இத்திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது எதிர்காலத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்திருந்தது. மேலும் இத்திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் நீதி மன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அரசு இத்திருத்த சட்டத்தை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதால் இத்திருத்தச் சட்டத்தினை (மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்றி) சாதாரண பெரும்பான்மையுடன் (51 வீதம்) நிறைவேற்றி விட வழிதேடுகின்றது. அதனடிப்படையில் மாகாணசபைகள் அனைத்தும் குறித்த ஒரு விடயம் பற்றிய ஒப்புதல்களை அளிக்குமிடத்து அவ்விடயத்தை நிறைவேற்ற சாதாரண பெரும்பான்மை ஆதரவு மட்டுமே பாராளுமன்றத்திற்கு போதுமானதாகும். இது மாகாணசபைகளுக்குரிய முக்கிய அதிகாரங்களில் ஒன்றாகும். இலங்கையில் இன்று இயங்குகின்ற எல்லா மாகாண சபைகளும் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் மாகாணசபைகளை கொண்டே மேற்படி திருத்த சட்டத்திற்கான ஒப்புதல்களை பெற்றுகொள்ளும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. மேற்படி ஒப்புதல்களை வழங்குவதை ஏதாவதொரு மாகாணசபை மறுக்க நேரிடின் பாராளுமன்றம் மேற்படி சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற முடியாது போகும். எனவே மேற்படி திருத்த சட்டத்தை நிறைவேற்ற இன்று இலங்கை பாராளுமன்றம் கிழக்கு மாகாணசபையின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்திருத்தச் சட்டத்தில் பல விடயங்கள் அடங்கியுள்ள போதிலும் மிகமுக்கிய விடயமாக உள்ளுராட்சிசபை தேர்தல்களில் இன்றுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நீக்கிவிட்டு வட்டாரமுறையை மீள அமுல்;படுத்தும் யோசனை குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமன்றி வட்டார எல்லைகள் வகுக்கப்படுவதற்கும், திருத்தப்படுவதற்குமான அதிகாரங்கள் (ஆணைக்குழுக்கள் ஏதுமின்றி) நேரடியாக மத்திய உள்ளுராட்சி அமைச்சரிடம் குவிக்கப்படுவதற்கும் இத்திருத்த சட்டம் இடமளிக்கிறது. தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறையை பொறுத்தவரை சிறுபான்மை கட்சிகள் பலமடைவதற்கும் சிறுபான்மை மக்களின் பிரதி நிதித்துவங்களை உறுதிப் படுத்திக்கொள்வதற்கும் வாய்ப்பானதொரு முறையாகும். சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியகட்சி போன்ற பலமான கட்சிகள் கூட ஒரு நிலையான ஆட்சியை அமைக்க சிறுசிறு கட்சிகளின் ஆதரவுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலையை இவ்விகிதாசார பிரதிநிதித்துவ முறையே ஏற்படுத்தியது. அதாவது சிறுபான்;மை கட்சிகளின் ஒத்துழைப்புக்கள் இன்றி ஆட்சி அமைப்பது என்பது முடியாத காரணமாகும். இந்தநிலைமைகள் சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசும் தகுதியை அதிகரிக்க வாய்;ப்பளித்தன. இதனூடாக சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், அமைச்சரவையில் பங்கெடுத்து அதிகாரங்களை பங்கிட்டு கொள்ளவும், தத்தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும் முடிந்தது. இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கடந்த காலங்களில் இலங்கை அரசியலில் திர்மானிக்கும் சக்திகளாக திகழ மேற்படி விகிதாசார முறையே அடிப்படைக்காரணமாகும். கிழக்கு மாகாண சபையில் கூட வெறும் 6 ஆயிரம் வாக்குகளை பெற்ற போதிலும் நங்;கூர சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய முக்கூட்டு அணியினர் ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடிந்ததற்கு இவ்விகிதாசார பிரதிநிதித்துவ முறையே உதவியது. ஒரு சில நூறு வாக்குகளுடன் ஈரோஸ் மட்டக்களப்பு மாநகரசபையில் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற முடிந்ததும் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் பலனே ஆகும். எனவே விகிதாசார பிரதிநிதித்துவ முறை அமுலாக்கப்படின் அது சிறுபான்மை கட்சிகளை வலுவிழக்க செய்யும். இது பெரும் தேசியக் கட்சிகளின் ஆட்சி அதிகாரங்களை எதேச்சதிகாரத்தை நோக்கி நகர செய்யும். அதுமட்டுமன்றி வட்டார, தொகுதி எல்லைகளை வகுக்கும் முழு அதிகாரமும் தனி ஒரு அமைச்சரின் கீழ் கையளிக்கப்படும் போது அது இனவாத ரீதியில் அமுல் படுத்தப்படுவதற்கும் வாய்ப்புகளை வழங்கும். பல்லினங்கள் கலந்து வாழும் கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம் போன்ற பிரதேசங்களில் இனமுரண்பாடுகளை தோற்றுவிக்க இந்த புதிய எல்லை பிரிப்புக்குரிய நடைமுறை வேலைத்திட்டங்கள் வழி வகுக்கக் கூடும். இன்றைய பிரச்சனைகளின் தீர்வுக்கு அதிகார பரவலாக்கத்தின் அவசியம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்படும் இவ்வேளையில் அதிகார குவிப்புக்கு வழிகோலும் இச்சட்டத்திருத்த முயற்சி நாட்டின் எதிர்காலத்தை பின்நோக்கி நகர்த்தும் செயலாகும். இந்த நிலையில் இந்த திருத்த சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை ஒப்புதல் அளிக்குமா என்கின்ற கேள்விகள் எழுந்துள்ளது. கிழக்குமாகாணசபை ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் பாராளுமன்றிற்கு இந்த சட்டதிருத்த மசோதாவை அரசாங்க தரப்பினர் சமர்பிக்க முடியாதுபோகும். ஆனால் அரசாங்கமோ கிழக்கு மாகாணசபையிலும் தமது கூட்டாட்சியே நடைபெறுவதால் அங்கிருந்து ஒப்புதலை பெற்றுக்கொள்ள கூட்டணி தர்மத்தை நம்பி காத்திருக்கிறது. கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் எடுக்கின்ற முடிவுக்கு கட்டுபடவேண்டிய நிலையில் இன்று பாராளுமன்றம் உள்ளது. கிழக்கு மாகாணசபை உள்ளுராட்சி சட்டதிருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்குமானால் அது கிழக்கு மாகாணத்துக்கு மட்டுமல்ல இலங்கைவாழ் சிறபான்மையினருக்கு எதிரான பாரிய துரோகம் இழைத்ததாகிவிடும். அதேவேளை ஒப்புதல் அளிக்க மறுத்தால் அது அரசாங்கத்துடன் பாரிய முரண்பாடு ஒன்றை தோற்றுவிக்க வழிகோலும். ஏற்கனவே 13 ம் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்த கோரியும், காணி, பொலிஸ் அதிகாரங்களை கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் கருத்துக்கள் அரசுடன் அவர் மக்கள் நலன்களுக்கு எதிராக சமரசம் செய்து கொள்ள தயார் இல்லை என்பதை காட்டுகின்றது. இதன் காரணமாக ரி.எம்.வி.பி. அமைப்பினர் அரசிடம் இருந்த செல்வாக்கை படிப்படியாக இழந்து வருவது தெரிந்த விடயமே. குறிப்பாக ரி.எம.வி.பி. முக்கியஸ்தர்களுக்கும் முன்னாள் வேட்பாளர்களுக்கும் இருந்துவந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைக்கப ;பட்டும், மீளப்பெறப்பட்டும் உள்ளன.
இந்த நிலையில் உள்ளுராட்சி சட்டதிருத்தம் விடயத்தில் ஒரு தீர்மானகரமான முடிவுக்கு வரவேண்டிய நிலையில் முதல்வர் இருக்கின்றார். வரலாற்று துரோகமிழைத்து பதவியையும், கட்சியையும் காப்பாற்ற போகின்றாரா? இல்லை சொந்த நலன்களை விட மக்கள் நலன்களே முக்கியமானவை என்று அரசியல் நேர்மையை நிலைநாட்ட போகின்றாரா? என்கின்ற கேள்விகளே இன்று எழுப்பப்படுகின்றன.

0 commentaires :

Post a Comment