4/27/2009

வன்னி அகதிகளுக்கு உதவி வழங்குமாறு முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை


வன்னியில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வருகின்ற தமிழ் சகோதரர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களின் ஊடாக நிவாரணப்பொருட்களை சேகரித்து அனுப்புமாறு ஜம் இயத்துல் உலமாவின் உதவிச்செயலாளர் மௌலவி தாசிம் அறிவித்துள்ளார். தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இடம்பெயரும் வன்னி மக்களுக்கு இன்று அவசியமாக சமைத்த உணவே வழங்கவேண்டியதாக சுட்டிக்காட்டி அதனை முதலில் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து ஜமா அத்தே இஸ்லாமிய குழுவை வவுனியாவுக்கு அனுப்பி அங்கு உணவை சமைத்து வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வாழுகின்ற முஸ்லிம்கள் மதியஉணவு மற்றும் உணவுப்பொருட்களை உடன் சேகரித்து வவுனியா நலன்புரிநிலையங்களில் உள்ள அகதிகளுக்கு வழங்குமாறும் மௌலவி தாசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடிநீர் போத்தல், குழந்தைகளுக்கான பால்மா வகைகள், பிஸ்கற் வகைகள், பெண்களுக்கான உடுபுடவைகள் , சுகாதாரத் துணிகள், பெட்சீற், சாரம் போன்றவற்றைச் சேகரித்து வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தெமட்டகொடவில் உள்ள வை.எம்.எம்.ஏ.தலைமையகத்தில் இப்பொருட்களை ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலதிக விபரங்களுக்கு 0777797311 அல்லது 0772612288 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 commentaires :

Post a Comment