மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் இடையில் முதற் தடவையாக இன்று நேரடி ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது நீண்ட காலமாக மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் நேரடி ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கிழக்கு மாகாண மக்கள் வலியுறுத்தி வந்தனர்.இன்று முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து முதலாவது சேவையை மட்டக்களப்பு ரயில் நிலையத்தின் அதிபர் அருணாசலம் சிவனேசராஜா ஆரம்பித்து வைத்தார். குறிப்பிட்ட ரயில் இன்று மாலை 5.00 மணிக்கு திருகோணமலையைச் சென்றடையும் என அவர் தெரிவிக்கின்றார். காலை 7.45 மணிக்கு திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் புறப்படும் குறிப்பிட்ட ரயில் பிற்பகல் 3.30 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை வரையியிலான சகல நிலையங்களிலும் ரயில் தரித்து நிற்கும். இச்சேவையின் பலனாக மட்டு. - திருமலை ரயில் பயணிகள் கொழும்பு ரயிலின் இணைப்பைப் பெறுவதற்காக 5 முதல் 8 மணித்தியாலங்கள் கல்லோயா சந்தியில் காத்திருக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகின்றது.இதற்கிடையில் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கான 'உதய தேவி' கடுகதி ரயில் இன்று காலை மட்டக்களப்பிலிருந்து கொழும்புக் கோட்டை நோக்கி முதலாவது பயணத்தை ஆரம்பித்தது. இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது. மத்திய அமைச்சர் அமீர் அலி, மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் ஆகியோர் இச்சேவையை மட்டக்களப்பிலிருந்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.இந் நிகழ்வில் ரயில்வே பொது முகாமையாளர் லலிதஸ்ரீ குணருவன், பிரதி பொது முகாமையாளர் சி.ஆர்.பி. சந்திரதிலக்க ஆகியோரும் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்வை முன்னிட்டு நேற்று மாலை முதல் மட்டக்களப்பு ரயில் நிலையம் மற்றும் அதனை அண்மித்த வீதிகளில் மேலதிக பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
0 commentaires :
Post a Comment