நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 65% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஐ.ம.சு.மு. 15 இலட்சத்து ஆறாயிரத்து 115 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்படி, தெரிவான 102 உறுப்பினர்களில் இரண்டு போனஸ் ஆசனங்களுடன் 68 ஆசனங்களை முன்னணி பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 6 இலட்சத்து 88 ஆயிரத்து 253 (29.58%) வாக்குகளைப் பெற்று 30 ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேல் மாகாண சபைத் தேர்தலில் 8 இலட்சத்து 17 ஆயிரத்து 862 மேலதிக வாக்குகளைப் பெற்று மூன்றிலரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகளின்படி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அதன் கோட்டையாக விளங்கிய பல தொகுதிகளில் வாக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. ஜே. வி. பி.யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் படுதோல்விக்கு முகங்கொடுத்துள்ளன.
நேற்று முன்தினம் (25) காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை 2769 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்ற வாக்குப் பதிவின் பின்னர், 319 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.
அதற்கமைய, நேற்று (26) அதிகாலை 1.45 இற்குப் பின்னர் முதலாவது தேர்தல் முடிவு வெளியானது. நேற்று நண்பகல் 12 மணிக்கு மூன்று மாவட்டங்களினதும் இறுதி முடிவுகள் வெளியாகின. எனினும், தெரிவான உறுப்பினர்களின் விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் நிறைவு செய்யப்படவில்லை.
மேல்மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கவென 38,20,214 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், 23,26,886 பேர் மாத்திரமே வாக்களித்திரு ப்பதாகத் தேர்தல் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதில் கடந்த தேர்தலைவிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளது.
கொழும்பு நகரம் உள்ளிட்ட தேர்தல் வலயத்தில் முன்னணிக் 66% வாக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் வாய்ந்த தொகுதிகளாக விளங்கிய கொழும்பு வடக்கு, மத்தி, பொரளை, பியகம உள்ளிட்ட இடங்களில் அக்கட்சிக்கும் கணிசமான அளவு வாக்கு வீதம் குறைவடைந்துள்ளது.
இவ்விடயங்களில் ஐ. ம. சு. முன்னணிக்கு வாக்கு வீதம் அதிகரித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 5 இலட்சத்து 30 ஆயிரத்து 370 வாக்குகளைப் பெற்று 25 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், ஐ. தே. க. 3 இலட்சத்து 27 ஆயிரத்து 571 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு 3,51,215 வாக்குகள் கிடைத்துள்ளதோடு 14 ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஐ. தே. க. 1,24,426 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் கூட்டமைப்பு 6,24,530 வாக்குகளைப் பெற்று 27 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஐ. தே. க. 2,36,256 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைப்பெற்றுக்கொண்டுள்ளது.
இந்தத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.)க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களிலும் ஓர் ஆசனம் வீதம் 3 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், மாகாணத்திலேயே மொத்தமாக 56,384 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் இரண்டு ஆசனங்களை இழந்துள்ளது. கடந்த தேர்தலில் 70,731 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 49,388 வாக்குகளைப் பெற்று கொழும்பிலும், கம்பாஹாவிலும் தலா ஓர் ஆசனம் வீதம் இரண்டினை மாத்திரமே பெற்றுள்ளது. மு.கா. வுக்கு களுத்துறையில் ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை. ஜனநாயக ஐக்கிய முன்னணி (துஆ) மூன்று மாவட்டங்களிலுமாக 11,970 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது. இந்தக் கட்சிக்கு கொழும்பு மாவட்டத்தில் ஓர் உறுப்பினர் தெரிவாகியுள்ளார்.
இதேவேளை, சுயேச்சைக் குழுக்கள் அனைத்தும் கட்டுப்பணம் இழந்துள்ளன.
அதேநேரம், இடதுசாரிக் கட்சிகளும் சிங்கள அடிப்படைவாதக் கட்சிகளும் படுதோல்வி யடைந்துள்ளன.
0 commentaires :
Post a Comment