4/25/2009

வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தி செலவினத்தைக் குறைக்க புதிய வகை இயந்திரம் அறிமுகம்

சுமார் 55 வருடகால பழைமைவாய்ந்த வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தவென தேச நிர்மாண அமைச்சின் 20 மில்லியன் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய இயந்திரமொன்று தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
உமி மூலமாக எரியூட்டும் இவ்வியந்திரத்தின் செயற் பாட்டினை கடதாசி ஆலையின் தலைவர் சிறிபால அமரசிங்க வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
ஆலை முகாமையாளர் ரீ. வாமதேவன் தலைமையில் இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்தில் சர்வமதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உமியை எரிபொருளாகக் கொண்டு இப்புதிய இயந்திரம் இயங்கச் செய்வதனால் கடதாசி உற்பத்திச் செலவு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை கடதாசி ஆலையில் மூவாயிரம் ஊழியர்கள் பணியாற்றி மாதம் ஒன்றில் 1800 தொன் உற்பத்தி இடம்பெற்றது. பிற்காலத்தில் அரசுகளின் மாறுபட்ட கொள்கை காரணமாக சந்தைப்படுத்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியினையடுத்து ஆலை நட்டத்தில் இயங்கியது.
இதையடுத்து ஊழியர்களது எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 240 ஊழியர்கள் மாத்திரமே பணியாற்றுவதுடன், மாதத்திற்கு 450 தொன் கடதாசியே உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள கட்டடங்கள் பழைமையடைந்துள்ளதுடன், இயந்திரங்களும் துருப்பிடித்துக் காணப்படுகின்றன.
இங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குக் கூட உற்பத்தி இலாபம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்புரைக்கிணங்க வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் புதிய இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


0 commentaires :

Post a Comment