வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நலன்புரி நிலையங்களில், தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் 110 பேர் அந்த நிலையங்களின் முகாமைத்துவ உதவியாளர்களாக மீள்குடியேற்ற அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வைபவரீதியாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் தொடர்பிலான பிரிகேடியர் எல்.சி.பெரேரா ஆகியோரினால் வவுனியா செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கப்பட்டன. இடம்பெயர்ந்த மக்களின் இடைத்தங்கல் நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த 110 பேரும் ஏற்கனவே இந்த நிலையங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் தொண்டர்களாகப் பணியாற்றியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இடைத்தங்கல் நிலையங்களின் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ள கிராமசேவை அதிகாரிகளுக்கு இந்த உதவியாளர்கள் பல்வேறு பணிகளிலும் உதவிபுரிவார்கள் என்றும், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் சுகாதாரம், தண்ணீர் மற்றும் மின்சாரம் என்பவற்றைப் பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தும் வழிவகைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இடைத்தங்கல் நிலையங்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நாளாந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment