4/06/2009

புலிகளின் ஏழு சிரேஷ்ட தலைவர்கள் உட்பட 420 பேர் பலி; ஆயுதங்கள் மீட்பு


தீபன், விதுஷா, துர்க்கா, நாகேஷ், கடாபி, மணிவண்ணன், ஆதித்யன் உட்பட 250 புலிகள் பலி
புலிகளின் சிரேஷ்ட தலைவர் பானு படுகாயம்
3 தினங்களில் 420 புலிகளின் சடலங்கள் மீட்பு
130 மி.மீ. ரக 3 பீரங்கிகள் மீட்பு


புதுக்குடியிருப்பு பிரதேசத்தை புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையின் போது படையினர் நடத்திய தாக்குதல் களில் புலிகளின் முக்கிய தலைவர்களான தீபன், விதுஷா, துர்கா, நாகேஷ், கடாபி மற்றும் மணி வண்ணன் உட்பட 250ற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை, புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான பானு படையினரின் இந்தத் தாக்குதல்களில் படுகாய மடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பை விடுவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் கடந்த மூன்று தினங்கள் மாத்திரம் நடத்திய தாக்குதல்களில் 420 ற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப் பட்டுள்ளதுடன் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கனரக ஆயுதங் கள், துப்பாக்கிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான குண்டுகளையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர்.
படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஐந்து முக்கிய தலைவர்களில் புலிகளின் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும் அடங்குவர், நாகேஷ், கடாபி மற்றும் தீபன் ஆகிய மூன்று முக்கிய தலைவர்களும் புலிகளின் பிராந்திய பொறுப் பாளர்கள் ஆவர்.
கடாபி, பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலருமாவார். மணிவண்ணன் புலிகளின் ஆட்டிலறிப்பிரிவுத் தலைவராவார்.
புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கடும் மோதல்களின் போது புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் பொட்டு அம்மான், தீபன் மற்றும் பானு ஆகியோர் களமுனையில் படையினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக் கையில் பங்கு கொண்டுள்ளனர்.
இவர்களில் பானு நேற்றைய தினம் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் படுகாயமடைந்து ள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள் ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 53 வது மற்றும் 58வது படைப்பிரி வினர்களும், எட்டாவது அதிரடிப் படையினரும் இணைந்து புலிகளை பலமுனைகளில் முற்றாக சுற்றிவளைத்து கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல்களில் 400க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இவர்களில் 120 புலிகளின் சடலங்களை 53 வது படைப் பிரிவினரும், 140 சடலங்களை 58வது படைப்பிரிவினரும் கண்டெடுத்துள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை இந்தப் பிரதேசத்திலிருந்து 130 மி.மீ.ரக பீரங்கிகள்-03, 85 மி. மீ. ரக பீரங்கிகள்-01, 30 மி. மீ. ரக பெடல் துப்பாக்கி -01, சுமார் 600 தொடக்கம் 700 வரையான சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் உட்பட பெருந்தொகையான 12.7 மி. மீ. ரக ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.


0 commentaires :

Post a Comment