வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்றுக்காலை உணவு உட்கொண்ட பாடசாலை மாண விகளில் 28 மாணவர்கள் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றுக்காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இப்பாடசாலையிலுள்ள மூன்றாம் வகுப்பு ‘டி’ பிரிவில் கல்விகற்கும் மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. இவ் வகுப்பிலுள்ள 35 மாணவிகளில் 28 மாணவிகள் திடீர் வயிற்று நோவு, வாந்தி என்பன ஏற்பட்டதால் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக இப்பாடசாலையின் அதிபர் எம்.ரி.எம். பரீட் தெரிவித்தார்.
வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப்பாடசாலை மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், இம்மாணவர்கள் காலை உணவு உட்கொண்டதில் அவ்வுணவு பழுதடைந்து இருந்ததால் அதில் நஞ்சுத் தன்மை ஏற்பட்டதினாலேயே மாணவர்களுக்கு திடீர் வயிற்று நோவு, வாந்தி என்பன ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் மைதிலி யோகநாதன் தெரிவித்தார்.
இச்சம்பவத்தையடுத்து வாழைச்சேனைப் பிரசேதம் அல்லோலகல்லோலமாகக் காணப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்குச் சென்று தமது பிள்ளைகளின் நிலைவரம் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.
இச்சம்பவத்தையடுத்து கிழக்கு மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் ஜவாஹீர் சாலி உட்பட பிரமுகர்கள் பாடசாலைக்கு சென்று நிலைமைகளை அவதானித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொதுச் சுகாதார அலுவலகம் விசாரணைகளை நடத்தி வருகின்றது.
இம்மாணவிகளுக்கு காலை உணவாக இடியப்பம், பருப்புக்கறி என்பன வழங்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத னையடுத்து பாடசாலை நேற்று கால வரையறையின்றி மூடப்பட்டது.
0 commentaires :
Post a Comment