3/29/2009

தமிழ்க் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதியின் கதவுகள் திறந்தேயுள்ளன : அரசாங்கம் அறிவிப்பு; தீர்வில் உறுதி என்கிறது


பேச்சுவார்த்தை மூலமே தேசிய பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்காக அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துள்ளது. இது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை. அமெரிக்காவினதோ சீனாவினதோ மக்களை பற்றி பேச்சுநடத்த ஜனாதிபதி அழைப்பு விடுக்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேச்சுநடத்தவே அழைப்பு விடுத்திருந்தார்" என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். எதிர்காலத்திலும் எந்த நேரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதியின் கதவுகள் திறந்தே உள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அரசியல் நிலைமைகள் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்தமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. ஆனால் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது. அப்படியானால் அவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டுமே? பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணப்படவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. அதற்காகத் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்கின்றோம். இந்நிலையில் என்ன பிரச்சினையாயினும் பேசினால்தானே தீர்வை எட்டலாம்? பேச்சுவார்த்தைகளின்போது கருத்து முரண்பாடுகள் மற்றும் இணக்கப்பாடின்மை என்பன தோன்றலாம். ஆனால் முதலில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தாமல் பிரச்சினைகள் பற்றி கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதனால்தான் நாட்டின் உயர்மட்டத்திலிருந்து பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்க தரப்பினருடன் பேச்சுநடத்தி தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் எமக்கு உணர்த்தவேண்டும். தமிழ் மக்களின் தேவைகள் தொடர்பில் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். இதுதான் உண்மையில் இடம்பெற்றிருக்க வேண்டும். அதனைவிடுத்து, பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏன் நிராகரிக்கின்றனர் என்பது புரியவில்லை. எமது பிரச்சினையை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும். அதற்கான முயற்சிகளையே நாம் மேற்கொள்கின்றோம். அமெரிக்காவினதோ சீனாவினதோ மக்களைப் பற்றிப் பேச்சு நடத்த ஜனாதிபதி தமிழ்க் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை. மாறாக இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தொடர்பில் பேச்சுநடத்தவே அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவேண்டும். தமது பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. எனினும் ஜனாதிபதி கதவுகளை மூடப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கதவுகளை எப்போதும் திறந்தே வைத்துள்ளார்" இவ்வாறு அவர் கூறினார்.


0 commentaires :

Post a Comment