3/03/2009

நிவாரணப் பொருட்களில் அரிசி இல்லை : மட்டக்களப்பில் யுத்த அகதிகள் புகார்


மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் யுத்த அகதிகளாகத் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் தேச நிர்மாண அமைச்சு வழங்கும் வாராந்த உணவு நிவாரணத்தில் கடந்த 2 மாதங்களாக அரிசி வழங்கப்படவில்லை எனப் புகார்; தெரிவிக்கப்படுகின்றது. அரிசிக்குப் பதிலாகவும் கோதுமை மாவே வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. மேலதிக கோதுமை மாவை விற்பனை செய்தே தாங்கள் அரிசி வாங்கி சோறு சமைக்க வேண்டியிருப்பதாகவும் இக் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் தெரிவிக்கின்றனர். இம்மாவட்டத்தில் 12 நலன்புரி நிலையங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 1091 குடும்பங்களை உள்ளடக்கிய 4992 பேரும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 695 குடும்பங்களைச் சேர்ந்த 2445 பேரும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தங்கியிருக்கின்றனர். இக்குடும்பங்களுக்குத் தற்போது அரச நிவாரணமாக உலக உணவுத் திட்டத்தின் கீழ் அரிசி,கோதுமை மா, சீனி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியன மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. தற்போது அரிசி வழங்குவது நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாகவும் கோதுமை மாவே வழங்கப்படுவதால் தாங்கள் பல்வேறு சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்குவதாகக் கூறும் இவர்கள் தாம் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட குடும்பங்கள் என்றும் சுட்டிக் காட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட புனர்வாழ்வுத் திட்டப் பணிப்பாளர் கே. சிவநாதனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, "உலக உணவுத் திட்டம் நேரடியாக இந்நிவாரணப் பொருட்களை வழங்குகிறது. தற்போது அவர்களிடம் அரிசி கையிருப்பில் இல்லை என்பதால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். இருப்பினும் உள்ளுரில் அரிசியைக் கொள்வனவு செய்து இவர்களுக்கு வழங்குவது தொடர்பாகத் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்


0 commentaires :

Post a Comment