எட்டு முக்கிய தளபதிகளுக்கு மரணதண்டனை?
வரலாற்றில் என்றும் இல்லாதவாறு புலிகள் தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில் அவ்வமைப்பு பாரிய உள்முரண்பாடுகளில் சிக்கியுள்ளது. புலிகளின் படையணிகள் கண்டுவரும் பாரிய பின்னடைவின் காரணமாக பல மூத்த தளபதிகள் தலைவர் பிரபாகரனின் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். களமுனை தோல்விகளுக்கான காரணங்களாக பிரபாகரன் ஊடுருவல் மற்றும் துரோகம் போன்றவையே இருப்பதாகச் சொல்லி கடுமையான களையெடுப்பொன்றை உயர்மட்டத் தளபதிகள் மத்தியில் செய்துவருவதாகவும் புதுக்குடியிருப்புக்குள் நடைபெறும் சம்பவங்கள் புலப்படுத்துகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பொதுமக்களின் வெளியேற்றமும் புலிகளுக்கு தமது எதிர்காலப் பாதுகாப்புக் குறித்த அச்சநிலையைத் தோற்றுவித்தள்ளது. காரணம் தமது பாதுகாப்புக் கவசங்களாக உள்ள பொதுமக்களின் எண்ணிக்கை குறைவடைவது மட்டும் அன்றி மக்களது வெளியேற்றத்துடன் சேர்த்து புலிகளது இறுதிநேர இராணுவ முன்னெடுப்புகள் பற்றிய ரகசியத் தகவல்களும் இராணுவத் தரப்பை எட்டக்கூடும் என புலிகள் அஞ்சுகின்றனர். காட்டுப்பாதைகளினூடாகத் தப்பிவரும் மக்கள் மீது சூடு நடத்துவது மட்டுமன்றி அவ்வேளைகளில் கைதுசெய்யப்படுகின்ற அப்பாவி மக்கள் கொடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுவதோடு இன்றைய நிலையிலும் பாதள சிறைகளில் அடைக்கப்படுவதாக ஊர்ஜிதப்படுத்தக்கூடிய சிலதகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையனுக்கு புலிகளால் மரணதண்டனை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது சம்பந்தமாக மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் தப்பிவந்த பொதுமக்களின் ஊடாக வெளியாகியுள்ளது. மேற்படி மரணதண்டனை இளந்திரையனுக்கு மட்டுமல்ல புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரிகாலன் மற்றும் ரமேஸ், எழிலன் போன்ற கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த 8 உயர்மட்டத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அவர்கள் கருணா அம்மானுடன் தொடர்பு கொண்டு அரசபடைகளிடம் சரணடைவதற்கான உத்தரவாதம் பற்றி ரகசியப் பேச்சுகளில் ஈடுபட்டதாகவும் தலைவர் உட்பட உயர்மட்டத் தலைவர்கள் சிலரது நடமாட்டங்கள் பற்றிய ரகசியத் தகவல்களை படைத்தரப்பினருக்கு வழங்கியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்துரோகங்கள் பற்றிய உண்மைகள் பகிரங்கமாக அவர்கள் வாயினாலேயே ஒத்துக்கொள்ள வைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக சுட்டுக்கொல்லப்பட்டதாக உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் யாழ்மாவட்டப் பொறுப்பாளர் இளம்பருதி போன்றோரும் வெளிநாடு ஒன்றின் துணையுடன் சரணடையும் முயற்சியில் ஈடுபட்டு புலிகளிடம் அகப்பட்டுக் கொண்டுள்ளனர். தற்போது இவர்கள் பாதாளச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்படி செய்திகள் எல்லாம் புலிகளின் உயர்மட்டத்தலைவர்கள் மட்டத்தில் ஏற்பட்டுவருகின்ற முரண்பாடுகளும், இழுபறிகளும், துரோக குற்றச்சாட்டுக்களும் அளவுகடந்து வருவதை காட்டுகின்றது. புலிகளின் இறுதிக்காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற இந்த இறுபறிகளிலும் குத்துக்கரணங்களிலும் தலைவரும் தனது கடைசி முடிவுகளை எடுக்கும் நிலைக்கு மிகவிரைவில் தள்ளப்படுவார் என எதிர்பார்க்கலாம். அது சரணடைவா? சயனையிட்டா? என்பதை அறியக் காத்திருப்போமாக.
0 commentaires :
Post a Comment