3/30/2009

கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்கின்ற அமைச்சர் கருணாவின் கருத்து ஏற்புடையதா? வடிகட்டிய சுயநலத்தின் வெளிப்பாடா?

-கு.சாமித்தம்பி-









அதிகாரப் பகிர்வுகளுக்கு எதிராக அமைச்சர் கருணா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் முதற்தடவையானது அல்ல. பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது, காணி அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது என்ற நீண்ட காலமாகவே கருணா தெரிவித்து வருகின்றார். அவர் ரி.எம்.வி.பி. இல் இருந்த காலத்தில் அக்கருத்துகளுக்கிருந்த முக்கியத்துவத்தைவிட அமைச்சர் பொறுப்பேற்ற பின்னரும் அதே கருத்தை அவர் தெரிவிக்கையில் அதற்கான பரிணாமம் வேறானது. இவரது கருத்துக்கள் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் மட்டும் அல்ல முழு தமிழ் பேசும் மக்களிடையேயும் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்க வாழ் மக்கள் இதுவரை இழந்தவைகள் ஏராளம். தமிழ் மக்களின் போராட்டம் மக்கள் சார்பானதாக அன்றி பிரபாகரன் போன்ற பயங்கரவாத தலைமைகளுக்கானதாக மாற நேர்ந்ததால் இன்று மிகப்பெரிய மனித அவலத்தை எதிர்கொண்டுள்ளது. இந்தநிலையில் எமது போராட்டத்தின் வழிமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதன் வெளிப்பாடுகளாகவே பல முன்னாள் போராளி இயக்கங்கள் ஜனநாயகப் பாதையில் செயற்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே புலிகளில் இருந்து கிழக்கு மாகாணப் போராளிகள் பிரிந்தபோது மக்கள் அதனை ஆதரித்தார்கள். ஜனநாயகப் பாதை என்பதும் ஒரு வகையில் அரசியல் போராட்டம்தான். ஆனால் ஜனநாயக வழிக்கு திரும்புதல் என்பதன் அர்த்தம் சராணகதி அடைவதல்ல. ஆனால் வன்முறைகளைக் கைவிட்டதாகக் கூறுகின்ற கருணா அம்மான் அமைச்சர் முரளிதரன் ஆகிவிட்ட நிலையில் மக்கள் உரிமைகளுக்கெதிராக தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் சரணாகதி அடைந்தவனின் வார்த்தைகளைவிட தரம் தாழ்ந்துள்ளன. கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் தேவையில்லை என்ற சொல்வதற்கு மக்கள் இதுவரை முரளிதரனுக்கு ஆணை வழங்கவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சபையும் அமைச்சரவையும், முதலமைச்சரும் அதிகாரப் பகிர்வுக்கான ஜனநாயகக் கோரிக்கைகளுக்காக போராடி வருகின்ற இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நியமனப்பட்டியல் எம்.பி.யாக பதவியைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் முரளிதரன் அதற்கெதிராக கருத்துத் தெரிவிக்க அருகதையற்றவராகும். கிழக்குமாகாண மக்களின் சார்பில் அதுவும் அந்த மக்களுக்கு எதிராகவே கருத்துத் தெரிவிக்க தார்மீக தகுதி எதுவும் அமைச்சர் முரளிதரனுக்கு கிடையாது. அதிகாரங்கள் தேவையில்லை என்றால் இதற்காக இவ்வளவு அழிவுகளையும் இழப்புகளையும் மக்கள் எதிர்கொண்டார்கள்? ஒரு இனம் தனது பிரிவினைக் கோரிக்கையை கைவிடலாம். வன்முறைகளையும் கைவிடலாம்;. ஆனால் தனது இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளைக் கோருவது மிக மிக அவசியமானதாகும். இன்று தமிழ் தலைவர்கள் மட்டுமல்ல சிங்களத் தலைவர்களில் பலர் கூட அதிகாரப் பகிர்வு எப்படியிருக்க வேண்டும் என்ற ஆராய்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்தியா கூட தமிழ் மக்களின் பிரச்சனைகளை அதிகாரப் பகிர்வு மூலம் திர்க்குமாறு கோரியிருக்கின்ற நிலையில், இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை முன்வைக்குமாறு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக இலங்கை அரசை கேட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் அமைச்சர் முரளிதரன் கூறிவருகின்ற கருத்துக்கள் வடிகட்டிய சுயநலத்தின் வெளிப்பாடுகள் மட்டுமேயாகும். வெளிநாட்டமைச்சராக இருந்த கதிர்காமர் கூட புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை எதிர்த்தாரேயன்றி தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு எதிராக ஒருபோதும் அவர் கருத்துக் கூறியதில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்று எது வந்தாலும் அதனுடன் சேர்ந்து எம்.பி.யாகவும் அமைச்சராகவும் இன்றுவரை இருந்துவரும் டக்ளஸ் தேவானந்தா கூட இதுபோன்ற மக்கள் விரோதக் கருத்துக்களை ஒருபோதும் வாய்திறந்து உதிர்த்ததில்லை. இன்றும் அவர் அமைச்சராக இருக்கின்ற போதிலும் அதிகார பகிர்வுக்கான கோரிக்கைகளை என்றமே கைவிட்டதில்லை. “மத்தியில் கூட்டாட்சி, மானிலத்தில் சுயாட்சி” தனித்துவத்துக்கும் ஒற்றுமைக்குமான ஒரே நேர அழைப்புடனேயே அவர் அரசியல் நடாத்துகின்றார். தமிழ் மக்களின் உரிமைகளுக்கெதிராக இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதனூடாக கருணா அம்மான் அமைச்சு பதவிகளை அனுபவிக்கலாம். ஆனால் மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை. குறைந்த பட்சம் பொலிஸ் அதிகாரம் ஒன்றே அதை உறுதிப்படுத்தும். அதனாலேயே 13 வது சட்டத் திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பாராளுமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது இன்று சாதாரண ஒரு சராசரி பிரசை கூட 13 வது சட்டத்திருத்தம் பற்றி பேசும் அளவிற்கு அரசியல் விழிப்புணர்ச்சி மக்களிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இவையெதையும் கண்டுகொள்ளாமல் தனக்கு அமைச்சுப் பதவி மட்டுமே தேவை. மக்களைப் பற்றி எந்தக்கவலையும் இல்லை என்பதாக அமைச்சர் முரளிதரனின் கருத்துக்கள் அமைந்துள்ளன. இவை மக்களிடத்தில் ஏற்படுத்திவருகின்ற அதிருப்திகள் அளவுகடந்து இருக்கின்றன. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மக்களது அதிருப்திகளை ஊடகங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும். கிழக்கு மாகாண மக்களின் இறைமைக்கெதிராக அமைச்சர் கூறியுள்ள கருத்துக்களை வாபஸ் பெறக் கோர வேண்டும். அமைச்சர் முரளிதரனின் கருத்துக்கெதிராக பகிரங்க கண்டனத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்பதே இன்றயை கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்பாகும்.


0 commentaires :

Post a Comment