3/06/2009

பெரும் துயரில் வன்னி மக்கள் பத்திரிகை அறிக்கை

உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையாலும், பனடோல், விட்டமின் சி இரண்டைத்தவிர வேறு எதுவித மருந்துவகைகளும் இலலாமையால் வன்னிவாழ் மக்களும் நோயாளிகளும் துன்பப்படுவது வேதனைக்குரியதாகும். உலர் உணவுப் பொருட்களும் அத்தியாவசிய மருந்துவகைகளும் விமானமூலம் பொட்டலங்களாக போடப்பட்டு விரைவில் தேவைக்கேற்ப கப்பல்கள் மூலம் போதிய அளவு அனுப்பப்படவேண்டும். ஏறக்குறைய மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வன்னியில் அகப்பட்டுள்ளனர். கிடைத்துள்ள செய்தி நம்பத்தக்கதாகும்.
நடவடிக்கைகளை நிறுத்தவிட்டு திரும்பி பார்க்கவேண்டிய காலம் அரசுக்கு வந்துள்ளது. மேற்கொண்டு தொடராது, தற்போதைய உண்மை நிலவரத்தை கணக்கெடுக்கவேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதய வன்னி நிலைமை உற்சாகத்தை தருவதாக இல்லாதது பெரும் துன்பத்தையே தருகின்றது. மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்குவதாக அறிகின்றேன். அதே நேரத்தில் சிலர் பட்டினியால் இறந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஏதோ நச்சுத்தாவரம் சேர்க்கப்பட்ட உணவை உண்ட ஒரே குடு;ம்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் அதிஸ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். விடுதலைப்புலிகள் தம் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து சூனிய பிரதேசத்திற்கு எவரேனும் தப்பிப் போகாதவாறு தடுப்புக் காவல் போட்டுள்ளனர். தப்பியோட முயற்சிப்பவர்களின் முயற்சிகளை முறியடிக்க சுற்றிவளைத்து தேடுதல் நடத்துவதோடு சிலர் தப்ப முயற்சித்தமையால் தம் உயிரையும் இழந்துள்ளனர்;;.
யுத்தம் வெல்லப்பட்டுவிட்டது. இது முழுக்க முழுக்க உண்மையாகும். விடுலைப்புலிகள் தாம் பழைய நிலைக்கு வந்துவிடுவோம் என எதிர்பார்ப்பார்களேயானால் அது வெறும் பகற் கனவாகும் அவர்கள் மக்களை பணயக் கைதிகளாக நடத்துவதற்கு சில காரணங்கள் உண்டு. ஒன்று அவர்கள் மக்களை மனிதகேடையமாக உபயோகிப்பதற்கும் மற்றயது தமது பேரம் பேசும் சக்தியை கூட்டுவதற்குமேயாகும். இச்சந்தர்ப்பத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் பல உண்டு. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தை வென்றெடுக்க ஆயிரக்கணக்கான போர்வீரர்களோடு பல்வேறு இழப்புக்களையும் சந்தித்துள்ளது.
யுத்தத்தின் வெற்றிக்கு ஒருவரை ஒருவர் எதிரியாக நினையாது நண்பாகள் போல பரஸ்பர உறவு கொண்டிருந்தமையாலேயே இலகுவாக வெற்றியடைவதற்கு மக்களின் ஆதரவு இருந்தது. இதில் விடுதலைப்புலிகளால் பலாத்காரமாக புலிகளின் அணியில் சேர்க்கப்பட்ட தம் பிள்ளைகளை இழந்த பெற்றோர் மிகத் தீவிரமாக செயற்பட்டனர். யுத்த முனையில் உயிர் இழந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள்கூட பலாத்காரமாக சேர்க்கப்பட்ட ஏழை மக்களின் பிள்ளைகளே. தொடர்ந்தும் பலாத்காரமாக ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றது. அண்மையில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்கூட ஈவிரக்கமின்றி கட்டாயப்படுத்தி புலிகளின் இயக்கத்தில் சேர்க்கப்படுகின்றார்கள். வன்னியில் உள்ள வயது முதிர்ந்தவர்களுக்குக் கூட குறுகிய கால தீவிர பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் அனுபவித்து வந்த சகல வசதிகளும் பறிபோன நிலையில் விடுதலைப்புலிகளால் இனி தலைதூக்கமுடியாது. ஆகவே அவர்களைப் பற்றி பொருட்படுத்தவேணடிய அவசியமில்லை.
ஆனால் ஓர் உயிரேனும் இழப்பின்றி அத்தனை பேரையும் விடுவிக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. பலாத்காரமாக சேர்க்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்குக் கூட புணர் வாழ்வு அளிக்கப்படவேண்டும். ஆகவே வன்னிக்குள் அகப்பட்டுள்ள ஒவ்வொரு ஜீவனையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அனைவருக்கும் தேவையான அளவு உணவு வழங்கப்படவேண்டும். கடந்த காலங்களில் ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப்புலிகளுக்கும் அரசே உணவளித்து வந்தது. விடுதலைப் புலிகள் அதை ஒரு வழக்கமாகவே எடுத்துக்கொண்டு தமக்கு வேண்டியதை எடுத்த பின்பே எஞ்சியதை மக்களுக்கு கொடுத்தனர். போதியளவு உணவு கிடைக்கப்பெற்றால்தான் பொதுமக்கள் தமக்குரிய பங்கினை முழுமையாகப் பெறமுடியும்.
இந்த யுத்தத்தை சிலர் வற்புறுத்துவது போல அவசர அவசரமாக முடிவிற்கு கொண்டுவர முடியாது மிகப் பெறுமதியான ஒன்றை யுத்தத்தால் இழந்தவர்களால் மட்டுமே யுத்தத்தால் மக்களுக்கு ஏற்படும் அனர்த்தத்தையும் உணரமுடியும். தமது தோழர்கள் பலரை இழந்து பல தியாகங்களை செயது இராணுவத்தினர் சம்பாதித்த நற்பெயரை விரயமாக்கமுடியாது. வன்னி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத்தினருக்கு ஆற்றிய விரிவான உரையில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா அவர்கள் கூறியிருப்பதாவது இனி நாம் அடையப்போகும் முன்னேற்றம் மிக்க அவதானமானது, அப்பாவி பொதுமக்களின் அதிகூடிய பாதுகாப்பை மனதில் கொண்டு எந்நேரமும் செயற்படவேண்டும் என்பதே. நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ள செயதிகளின்படி மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் வன்னியில் அகப்பட்டள்ளனர். ஆகவே யுத்தம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடம் சென்றாலும்கூட அரச படைகள் அதை சகித்துக்கொண்டு பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களில் பாதிக்கப்பட்டவர்களினதும், இறந்தோரினதும் எண்ணிக்கை கூடியிருப்பது மனதிற்கு வேதனை தருவதோடு, கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். தமது கடமையை திறம்பட செய்த விமானப் படையினர் இனி தமது விமானங்களை மனிதாபிமானப் பணிகளுக்கே உபபயோகிக்க வேண்டும். பீரங்கித் தாக்குதல்களும், ஷெல் அடிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு வன்னியில் அகப்பட்டுள்ள அத்தனை மக்களும் தந்திரமாகவும் அவதானமாகவும் பாதுகாப்புடன் வெளியில் கொண்டுவரப்பட வேண்டும்;. அப்போதுதான் இராணுவத்தினர் சம்பாதித்த நற்பெயரைப் பாதுகாக்கமுடியும்.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர், த.வி.கூ


0 commentaires :

Post a Comment