3/17/2009

வாகரைப் பிரதேச காட்டுப் பகுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச காட்டுப் பகுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் பலியான இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், அவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவித்தனர். வாகரைப் பிரதேசத்தின் மதுரங்குளம் மற்றும் கட்டுமுறிவு போன்ற பகுதிகளுக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றினையடுத்து அங்கு சென்ற படையினர் அக்காடுகளில் பதுங்கி நின்றுள்ளதாகவும், அவ்வேளையில் ஆயுதம் தாங்கிய மூவர் அப்பகுதியால் செல்வதை அவதானித்த படையினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் இருவர் அவ்விடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றவர் தம்வசம் வைத்திருந்த ரி-56 ரக துப்பாக்கியைப் போட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் மூன்று ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் வாகரைப் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 commentaires :

Post a Comment