திரைப்படம் என்பது பல அம்சங்களைக் கொண்டது. திரைப்பட வளர்ச்சியில் திரைக்கு முன்னால் மட்டுமின்றி திரைக்குப் பினனாலும் பல கலைஞர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். திரைக்குப் பின்னால் மின்னும் நட்சத்திரங்கள்தான் இந்த திரை இசைக் கலைஞர்கள். பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் என்று அவர்களை குறிப்பிடலாம். இலங்கைத் திரை இசை உலகில் சாதனை புரிந்தவர்கள் பலர் இருக்கின்றனர். பாடகர்களைப் பொறுத்தவரை வீ. முத்தழகு முக்கியமான இடத்தில் இருக்கிறார். அத்துடன் தனித்துவமான பாடகர் என்ற பெயரையும் பெறுகிறார்.இலங்கை தமிழ் இசை உலகில் வேறு எவரும் செய்யாத வகையில் "சப்தஸ்வரம்' என்ற தனி நபர் இசை நிகழ்ச்சியைப் பலமுறை மேடையேற்றி விட்டார். 1974ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரையுள்ள 30 வருட காலத்தில் "சப்தஸ்வரம்' நிகழ்ச்சியை 15 முறை மேடையேற்றிவிட்டார். மெல்லிசைப் பாடகராக கலை உலகிற்கு வந்த வி. முத்தழகு, மறைந்த தென்னிந்தியப் பாடகர் ஏ. எம். ராஜாவின் குரலை ஞாபகப்படுத்தும் நம் நாட்டுப் பாடகர் சிங்களம், தமிழ், ஹிந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடிவிட்டார். மெல்லிசைப் பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் என எவற்றையும் அவர் விட்டு வைக்கவில்லை. இலங்கையில் உருவான தமிழ்ப் படங்களில் இவர்தான் அதிகமாகப் பாடியிருக்கிறார் என்று கூறிவிடலாம். 10க்கு மேற்பட்ட சிங்களப் படங்களிலும் பாடியிருக்கிறார். கலாவதி, சுஜாதா, வனஜா, ஜெகதேவி, சந்திரிகா, லதா வல்பொல போன்ற நம் நாட்டுப் பாடங்களுடன் மட்டுமின்றி ஜிக்கி, ஜமுனா ராணி, சுசிலா போன்ற தென்னிந்திய சினிமாப் பாடகிகளுடன் சேர்ந்து பாடியிருக்கிறார்."சப்த ஸ்வரம்' தமிழ் நிகழ்ச்சியைப் போல் "பெம் கெக்குலு பிப்பி' (காதல் மொட்டுகள் மலர்கின்றன) என்ற தலைப்பில் தனி நபர் சிங்கள நிகழ்ச்சியை 10 முறைக்கு மேல் நடத்தி விட்டார்கள்.கொழும்பு, பம்பலப்பிட்டி சென். மேரிஸ் வித்தியாலயத்தில் முத்தழகு கல்வி பயின்றார். 1963இல் அப்பாடசாலையின் சிங்களப் பிரிவில் மெல்லிசைப் பாடல் போட்டி ஒன்று நடைபெற்றது. அப்போட்டியில் இவருக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. இச்சம்பவத்தின் பின் இசையே அவரது வாழ்க்கையாகவும் தொழிலாகவும் மாறியது. அதே ஆண்டில் பாகிஸ்தானில் லாகூர் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. சாரண இயக்கத்தில் அங்கு சென்ற முத்தழகு இந்த இசை நிகழ்ச்சியில் பாடினார். உருது மொழியிலும் சிங்கள மொழியிலும் பாடினார். தனது தாய்மொழியான தமிழில் பாடவும் மறக்கவில்லை.அந்த இளம் வயதிலேயே தான் ஒரு சினிமாப் பின்னணிப் பாடகராக வரவேண்டும் என்று கனவு கண்டாராம். அந்தக் கனவு "புதிய காற்று' திரைப்படம் மூலம் நனவாகியது.ஏ. எம். ராஜாவை மானசீகக் குருவாக கருதும் வி. முத்தழகு பிரபலம் பெற்றது "புதிய காற்று' திரைப்படம் மூலம் என்றாலும் அதற்கு முன்பே அவர் தமிழில் மெல்லிசைப் பாடல்களைப் பாடிவிட்டார். தமிழில் மெல்லிசைப் பாடல்களை பாடுவதற்கு முன்பு சிங்களத்திலும் பல மெல்லிசைப் பாடல்களை பாடிவிட்டார். இன்றுவரை இவர் பாடிய பாடல்களில் சிங்களப் பாடல்களே அதிகம். 4000 சிங்களப் பாடல்களைப் பாடியிருக்கும் இவர், தமிழ்மொழியில் 1500 வரையான பாடல்களையே பாடியிருக்கிறார். 1989ஆம் ஆண்டு பாடகி லதா வல்பொலவுடன் சேர்ந்து சைப்பிரஸ், லெபனான் போன்ற நாடுகளுக்கு சென்று இசைக் கச்சேரி செய்து விட்டு வந்தார். அடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு பாடகர் அபயவர்த்தன பாலசூரியவினால் வழங்கப்பட்டது.பரீசில் இவர் நிகழ்ச்சிக்கு வந்த இரண்டு இலங்கைத் தமிழ் கலைஞர்கள் இவரது இசைத்தட்டை வாங்காது சென்றது இவருக்கு பெரிய கவலையைக் கொடுத்ததாம். முதன் முதலில் "புதிய காற்று' படத்தில் பாடும் வாய்ப்பை வி. பி. கணேசன் இவருக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து "கோமாளிகள்', "ஏமாளிகள்', "நான் உங்கள் தோழன்', "தென்றலும் புயலும்', "தெய்வம் தந்த வீடு', "அநுராகம்', "எங்களில் ஒருவன்', "நெஞ்சுக்கு நீதி', "அவள் ஒரு ஜீவநதி', "நாடு போற்ற வாழ்க', "சர்மிளாவின் இதயராகம்' போன்ற படங்களில் பாடினார்."புதிய காற்று' 1975ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. "சர்மிளாவின் இதயராகம்' 1993ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட 20 வருட இடைக்காலத்தில் உருவான சகல தமிழ்ப் படங்களிலும் முத்தழகு பின்னணிப் பாடியிருக்கிறார் என்பது அவரது திறமைக்கு எடுத்துக் காட்டாகும். இலங்கையில் உருவான தமிழ்த் திரைப்படங்களில் முத்தழகுவே அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றுகூடச் சொல்லி விடலாம்."புதிய காற்று' திரைப்படத்தை அடுத்து "அநுராகம்' என்ற படத்தில் பாடினார். யசபாலித நாணயக்கார தயாரித்த இப்படத்தின் இசையமைப்பாளர் சரத் தஸநாயக்க ஆவார். இவர் இசையமைத்து முத்தழகு பாடிய ""எண்ணங்களாலே இறைவன் தானே'' என்ற பாடல் மிகவும் பிரபலம் பெற்ற பாடலாக விளங்கியது. இப்படத்தை தயாரித்து யசபாலித்த நாணயக்காரவே முத்தழகுவுக்கு சிங்களச் சினிமாவில் பாடும் வாய்ப்பை வழங்கினார். "ஆஞ்சனா' என்ற படத்தில் விஜயகுமாரதுங்கவுக்கு பின்னணி பாடும் வாய்ப்பே அது.இதையடுத்து "யச மித்துரோ', "அலிபாபா', ஹொறுஹதலி ஹா, சுஜா சத்த சூர்யா போன்ற படங்களில் பின்னணி பாடினார். தென்னிலங்கையில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் ஓரிரு தமிழ்ப் பாடல்கள் இடம்பெறும். அந்தப் பாடலை பாடுபவராக நிச்சயம் முத்தழகுவே வந்து நிற்பார். பேராதெனியவில் பிறந்த முத்தழகு சிறு வயதிலேயே கொழும்புக்கு வந்துவிட்டார். 1953 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிவிட்டார். 1957 ஆம் ஆண்டு வானொலியில் பாடத் தொடங்கிய இவர் சிங்களம், தமிழ் என்று பல பாடல்களைப் பாடிவிட்டார்.கர்நாடக இசைக்கு ஏ.எஸ். நாராயணனும் இந்துஸ்தான் இசைக்கு எம்.எஸ். செல்வராஜாவும் தனது வழிகாட்டிகள் என்று கூறுகிறார். இவரது திறமைக்கு 1995ஆம் ஆண்டு சிறந்த பாடகருக்கான ஜனாதிபதி விருதும் 2002 ஆம் ஆண்டு தேசிய பாடகருக்கான "கலாபூஷணம்' விருதும் கிடைத்தது.1987 ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சு இவருக்கு "மெல்லிசைச் செல்வன்' என்ற பட்டத்தை வழங்கியது. "இன்னிசை மணி', "கலை மணி' என்பனவும் முத்தழகுவுக்கு கிடைத்த மேலும் சில பட்டங்களாகும். 1995 ஆம் ஆண்டை முத்தழகுவால் இலகுவில் மறக்க முடியாது. அன்றுதான் இவர் 10 தமிழ் படங்களில் பாடிய 15 பாடல்கள் சி.டி. இசைத்தட்டில் வெளியாகி உலகத்தின் பல வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பாகியது. ஐரோப்பிய உலக இசைச் செயலகம் வருடாவருடம் வெளியிடும் சி.டி. இசைத்தட்டில் இவரது பாடல்கள் முதன் முதலாக பதியப்பட்டு உலகெங்கும் பரவியது. "சவுண் லங்கா இன்ரநேஷனல்' நிறுவனத்தின் அனுசரணையில் உருவாக்கப்பட்ட இந்த இசைத் தட்டுகளுக்கு 'கூச்ட்டிடூ ஏடிtண் ஊணூணிட் குணூடி ஃச்ணடுச்' என்று பெயர் சூட்டப்பட்டது. 1970 1980 காலப் பகுதி இலங்கை வானொலியின் சிறந்த மெல்லிசைப் பாடகராக முத்தழகு விளங்கினார். இன்றுவரை இலங்கையின் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பாடிவரும் அவருக்கு "தேசியப் பாடகர்' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. "மெல்லிசையை மக்கள் மயப்படுத்த வேண்டுமென்பது தன் கனவு' என்று கூறுகிறார் முத்தழகு."இலங்கையில் திரை இசை' என்ற தலையங்கத்தில் யாராவது சரித்திரம் எழுத முனைந்தால் 1975 முதல் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியை "திரை இசையின் செழிப்பான ஆண்டு' என்று எழுத வேண்டி வரும். அதில் பாடகர் முத்தழகுவின் பெயர் இடம்பெறாமல் அந்த அத்தியாயம் நிறைவு பெறாது.
0 commentaires :
Post a Comment