தமிழீழ விடுதலைப் புலிகள் விடுதலையின் பேரால் உருவான போதும் அந்த நோக்கு திசைமாறி சீர்கெட்டு இன்று குட்டிச் சுவராகியிருக்கிறார்கள். இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையுடன் புலிகள் இந்தியாவில் பயங்கரவாதிகளாக கணிக்கப்பட தொடங்கினார்கள். ஆனாலும் ஜரோப்பிய நாடுகளும் மேற்குலகமும் அவர்களை போராளிகள், கெரில்லாக்கள், பிரிவினைவாதிகள் என்ற முகவரி கொண்டே கணித்து வந்தது. 2002 ஆம் ஆண்டில் நோர்வே நாட்டின் உதவியுடன் புரிந்துணவு ஒப்பந்தம் ஒன்றை செய்ததினூடாக புலிகளுக்கு சர்வதேச ரீதியாக ஒரு மறைமுகமான ராஜதந்திர அந்தஸ்தும் கிடைத்திருந்தது. ஆனால் மாவிலாற்றில் புலிகள் யுத்தத்தை தொடங்கியதின் ஊடாக புரிந்துணவு ஒப்பந்தமும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளும் முறிந்து புலிகள் மீண்டும் பயங்கரவாதிகள் என்கின்ற முகவரியை பெற்றுக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து ஜரோப்பிய ய+னியன், கனடா, அவுஸ்ரேலியா என்று பலநாடுகளும் புலிகளை பயங்கரவாதிகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் புலிகள் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் மேற்கொண்ட மாத்தறை பள்ளிவாசல் மீதான தாக்குதலானது அவர்களது இந்துத்துவ அடிப்படைவாத பயங்கர முகத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது. புலிகளது வரலாற்றில் 1990 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் கொஞ்சநஞ்சமன்று. யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு லட்சம் முஸ்லிம்களை துரத்தியடித்த நிகழ்வு, காத்தான்குடி பள்ளிவாசல் இரண்டில் ஒரே நேரத்தில் 103 பேர் கொல்லப்பட்டனர். ஏறாவ+ரிலும் அதை அண்டிய கிராமங்களிலும் 116 பேர் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட நிகழ்வும், மக்கா யாத்திரைப் பயணிகள் 65 பேர் குருக்கள்மடம் பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கன. இந்தக் கொடூரங்களும் இனச்சுத்திகரிப்பு முயற்சிகளும் அன்றைய நிலையில் சர்வதேசத்தின் கவனத்தை எட்டவில்லை. ஏனெனில் இன்று உள்ளதுபோல் இலங்கைப் பிரச்சனை சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான அந்தத் தாக்குதல்கள் மேலாதிக்க மனப்பாங்கில் இருந்து எழுபவை. ஒரு இனத்தின் மீதான சுத்திகரிப்பு செயற்பாடு. இதற்கான அடிப்படைக் காரணம் புலிகளை வழிநடத்துவது யாழ்ப்பாணிய வைசவேளாள கருத்தியலே ஆகும் என்கின்ற சில கருத்துக்கள் இலங்கை எழுத்தாளர்களினால் முன்வைக்கப்பட்டது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் புலிகளை சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்த பலங்கொண்டவையாக இருக்கவில்லை. இந்த நிலையில்தான் புலிகள் மீண்டும் மீண்டும் ஏன் முஸ்லிம்கள் மீதான தமது மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கின்றார்கள். சர்வதேசமே பயங்கரவாதிகள் என்ற தம்மை முத்திரை குத்தியிருக்கின்ற நிலையில் பள்ளிவாசல் மீதான மற்றுமொரு தாக்குதலை ஏன் புலிகள் மேற்கொண்டார்கள் என்கின்ற கேள்விகள் எழும்புகின்றன. புலிகளைப் பொறுத்தவரையில் தமது உண்மையான முகமான யாழ்ப்பாண மேலாதிக்க குணாம்சத்தில் இருந்து விடுபடுவதென்பது தற்கொலைக்கு சமமானதொன்று. அதுமட்டுமன்றி இன்று உலகில் உள்ள முஸ்லிம் எதிர்ப்புவாத மனோநிலையை பற்றிப்பிடிப்பதன் ஊடாக சர்வதேச ரீதியாக தாம் இழந்துபோன ஆதரவுகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள். அது மட்டுமன்றி இந்தியாவில் வளர்ந்து வருகின்ற முஸ்லிம் எதிர்ப்புணர்வை பயன்படுத்தி தம்மை இந்துத்துவ சக்திகளின் ஆதரவாளர்களாகக் காட்டும் முயற்சியிலும் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள். இத்தகைய காரணங்களின் அடிப்படையிலேயே மேற்படி பள்ளிவாசல் தாக்குதல்களை புலிகள் ஈடுபட்டிருக்கின்றார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனது உடம்பில் ஓடுவது இந்து ரத்தம் என்று கடும்போக்கு இந்துத்துவ கொள்கை கொண்ட சிவசேன அமைப்பின் தலைவர் பால்தக்ரே ஒருமுறை சொன்னார். கடந்த சிலமாதங்களாக இந்த சிவசேனாவுடனும் அதுசார்ந்து நிற்கின்ற பாரதீய ஜனதா கட்சியுடனுமான உறவை புதுப்பிக்க புலிகள் கடும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து புலிகளைப் பாதுகாக்க உதவிகோரும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. சிவாஜிலிங்கம் போன்றோர் கடந்த மாதம் அக்கட்சியின் தலைவர் அத்வாணியை சந்தித்து பேச்சுக்கள் நடாத்தியிருந்ததும் இதில் ஒரு அங்கமேயாகும். இதன் தொடர்ச்சியாகவே பால்தக்ரே கடந்த இருவாரங்களுக்கு முன்னர் “இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உலக முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கலாம் என்றால், இலங்கையில் உள்ள இந்துக்களுக்காக நாம் ஏன் குரல் கொடுக்க முடியாது” என்று கர்ஜித்தார். அதுமட்டுமன்றி “காஸ்மீர் தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்க இலங்கைத் தமிழர்களை நாம் அனுசரித்து செல்வதன் ஊடாக புலிகளை நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது” என்கின்ற கருத்தக்களையும் தெரிவித்திருந்தார். அதாவது புலிகளின் கொள்கை கோட்பாடுகள் இந்துத்துவ அடிப்படை வாதத்தில் இருந்து எழுபவை, எழவேண்டும் என்பதே இந்திய இந்துத்துவ வாதிகளின் விருப்பமாகவும் நோக்கமாகவும் இருக்கின்றது. இந்த சமிக்கைகள் புலிகளுக்கு வாய்ப்பானவையாகும். தாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்கின்ற உருவகத்தை இன்னும் பலமாக்க, விஸ்தரிக்க வைப்பது இந்தியாவில் அதிலும் மத்தியில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு அமைப்பை தமக்கு வசதியாக, வாய்ப்பாக உபயோகித்துக்கொள்ள நல்ல வழி என புலிகள் சிந்திக்கின்றார்கள். இதன் காரணமாகவே புகலிடத்தில் இருந்து வெளியாகும் புலிசார்ந்த இணையத்தளங்களும் வானொலி, தொலைக்காட்சி போன்றவைகளும் கூட இந்துப்பாஸிஸ மனோநிலை கொண்ட பாரதீக ஜனதா கட்சியை புகலிடத்தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மறுபுறம் இஸ்ரவேல் கனவுகளில் இலங்கைத் தமிழர்களை மிதக்க வைத்து என்றுமே கிடைக்காத ஈழத்துக்காக ஆதரவு கோருகின்றார்கள். இன்னுமொரு புறம் அமெரிக்கப் படையினர் வந்து யுத்தத்தில் சிக்குண்டுள்ள மக்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை இட்டு ஆராய்ந்துவருகின்ற வேளையில் புலிகள் தம்மை முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்கின்ற விதத்தில் நிரூபித்துக்காட்ட முயலுகின்றார்கள். அமெரிக்கப்படையினர் வந்து புது மாத்தளங்கரையில் இறங்கி மக்களைக் காப்பாற்றி விட்டால் அடுத்த கணமே பிரபாகரனை சிறிலங்கா இராணுவம் ஆயுதம் இன்றியே துரத்திப் பிடித்துவிடும் நிலை உண்டு. எனவே அமெரிக்காவுக்கும் புலிகள் மாத்தறை பள்ளிவாசல் தாக்குதல் ஊடாக ஒரு செய்தியை அவசர அவசரமாக வெளிப்படுத்தியுள்ளனர். நாங்களும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் தான். பால்தக்ரேக்கும் பாரதீய ஜனதாவுக்கு மட்டுமல்ல நாங்கள் உங்களுக்கும் நண்பர்கள்தான். எங்களை அழிக்கமுயலும் சிறிலங்கா அரசுக்கு உதவவேண்டாம் என்பதாகவே அந்தச் செய்தி இருக்கின்றது. புலிகளது இந்தச் செய்தியை சர்வதேசம் உள்வாங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதனால்தான் என்னவோ ஜரோப்பாவில் இருந்து முதன் முறையாக புலிகளை “இந்துத்துவ புலிகள்” என விழித்து பிரான்சில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment