3/29/2009

காணி பகிர்ந்தளித்தால் மட்டும் போதாது



காணிகளை மட்டும் பகிர்ந்து கொடுப்பதால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருக்கும் தொழிலாளர்களால் சுயமாக ஒரு வீட்டை கட்ட முடியாது.
அன்றாடம் உழைத்து உணவு உட்பட பல தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கான பொருளாதார வசதியைக் கொண்டிராத இச் சமூகத்திற்கு தொழிற்சங்கத் தலைமைகளோ தோட்ட நிர்வாகங்களோ கைகொடுத்து உதவ முன்வரவில்லை.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு அவற்றின் மூலம் நிறைவேற்றிவைக்கப்பட வேண்டிய பணிகளைப் பெற்றுக்கொடுக்கவோ முன்வருவதில்லை. வறுமையில் வாழ்ந்துவரும் இவர்கள் தோட்ட வேலையையும் இழந்துள்ள காணியைப் பெற்றுக்கொண்ட போதிலும் குடியிருப்புகளில் இருப்பது போலவே தொடர்ந்தும் வாழ்ந்துவரும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இங்கிரிய தோட்டத்தில் வசித்து வந்த 55 தொழிலாளர் குடும்பங்களுக்கு 2000 ஆம் ஆண்டில் அதே தோட்டத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 15 பேர்ச் காணி வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒரு சிலர் தமது சுய முயற்சியினால் குடியிருப்புகளை அமைத்துள்ளனர்.
இருபத்தைந்தாயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் செலவழித்து மின்சார வசதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் மண், கிடுகு, தகரம் இவற்றினாலான குடிசைகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
குடிநீர், மின்சாரம், பாதை, சனசமூக நிலையம், விளையாட்டு மைதானம், மலசலகூட வசதி எதுவும் கிடையாது. வசதி வாய்ப்புக்கள் உள்ளவர்கள் தமது காணியில் குடிநீர்க் கிணறுகளையும் மலசல கூடங்களையும் அமைத்துக் கொண்டுள்ளனர்.
குடிநீர், மலசல கூட வசதியற்ற பலர் அயலவர்களின் கிணற்றிலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்வதுடன் மலசல கூடங்களையும் பாவித்து வருகின்றனர். குளிப்பதற்கென பொதுவான கிணறு அமைக்கப்படவில்லை. குளிப்பதற்கும், ஆடைகளைத் துவைப்பதற்கும் நீரோடைகள், குளக்கரையை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. காணி வாங்கி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை எதுவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வில்லை. காணிக்கான உறுதி கூட இதுவரை வழங்கப்படவில்லை. அரசியல்வாதிகளினதும், தொழிற்சங்கவாதிகளினதும் கவனத்துக்கு பல தடவைகள் கொண்டு வரப்பட்ட போதிலும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குகளை வாங்கிக் கொள்கின்றார்கள்.
ஆனால் எவ்வித உரிமையோ, உதவியோ, கிடையாது. யாருமற்ற அநாதைகளாகவே இருந்து வருகின்றோம்.
ஒவ்வொருவருக்கும் 40 பேர்ச் காணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தபோது அதை கிடைக்க விடாது தடுத்து 15 பேர்ச் காணியாக குறைப்பதற்கு தொழிற்சங்கவாதிகளே காரணமாக இருந்துள்ளனர். ஹொரணை பேர்த் தோட்டத்திலும் இதே நிலைதான் கூடுதலாக தொடர்ந்தது. எதனையும் பெற்றுக் கொடுக்காவிடினும் கிடைக்க விருப்பதைத் தானும் கிடைக்க விடாது இவ்வாறு தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வேதனைக்குரிய விடயமாகும் என குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையினத்தவர்களுக்கு இப்பிரதேசத்தில் காணிப் பங்கீடு செய்து தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளையில் இங்கு வசித்து வருபவர்களில் சிலர் தமக்குரிய 15 பேர்ச் காணியில் அரைவாசியை வெளியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு காணியை விலைக்கு வாங்கியவர்கள் சட்டரீதியாக காணி உறுதி எழுதி பெற்றுக் கொண்டுள்ளனர். இதனால் காணி உரிமையாளர்களுக்கு காணி உறுதி வழங்கப்படும்போது சிக்கல் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. காணி உரிமையாளர்களிடம் இது குறித்து கேட்டபோது,
தொழிலாளர்கள் தமக்கு உரிமை கிடைக்கவில்லை. உதவி கிடைக்கவில்லை என குறைகூறும் அதேவேளையில் தமக்கு கிடைப்பதை முறையாகப் பயன்படுத்தவோ, பாதுகாத்துக் கொள்ளவோ முயற்சிக்காது துஷ்ப்பிரயோகம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொழிலாளர் மத்தியிலும் பல தவறுகள் உண்டு என்பதை இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகும். இங்கு வசித்து வரும் குடியிருப்பாளர்களில் சிலர் கருத்துத் தெரிவிக்கையில்,
வெங்கடாசலம் யோகமர் (36)
காணி மட்டுமே வழங்கப்பட்டது. வேறு எந்த வித உதவியும், வழங்கப்படவில்லை. இதனால் வீடு கட்டிக்கொள்ள வசதியில்லாத காரணத்தினால் குடிசையமைத்துள்ளோம். லயத்தில் இருந்ததை விட மோசமாகவே இருந்து வருகிறோம். கீழ் பிரிவில் காணி பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மேல்பிரிவுக்கு வேலைக்குப் போகின்றனர். பெரும்பாலானோர் வெளியிடங்களுக்கே வேலைக்குப் போகின்றனர். சந்தாப் பணம் அறவிடப்படுகிறது. ஆனால் சங்கத்து தொழிற்சங்கத் தலைவர் மூலம் எதுவும் செய்து கொடுப்பதில்லை. அன்றாட சாப்பாட்டுக்கே உழைக்க வேண்டியுள்ளது. குடிநீர், மலசல கூட வசதி எதுவுமே கிடையாது. தலைவர்மார் அவரவரின் வசதியையும், தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
வை.எம். எக்னஸ் நோனா (67):
காணி கொடுத்த பின் எதுவுமே செய்து தரப்படவில்லை. காணிக்கு இன்னும் உறுதி கிடையாது. உறுதியைப் பெற்றுத்தர ஐயாயிரம் ரூபா கேட்கின்றனர். அன்றாடம் உழைத்து சாப்பாட்டுக்குக் கூட போதாமல் இருக்கும்போது எங்கிருந்து பணம் கொடுப்பது? காணி பெற்றுத் தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் 300 ரூபா சேர்த்து எம்மையும் வாகனத்தில் ஏற்றி களுத்துறை கச்சேரிக்கு கூட்டிச் சென்று மாதங்கள் பல கடந்துவிட்ட போதிலும் காணி உறுதி இதுவரை கிடைத்த பாடில்லை.
ஆர். நாகேஸ்வரி (27):
நானும் எனது கணவரும் பிள்ளைகள் இரண்டு பேருமாக ஒரு மண் குடிசையிலேயே வசித்து வருகிறோம். மிகவும் ரிZ(தியிலேயே வசித்து வருகிறோம்.
மலசல கூடம், குடிநீர் வசதி எதுவுமே இல்லை. அயலவரின் மலசல கூடத்துக்கே போக வேண்டியுள்ளது. அல்லது பற்றையை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பினால் கை, கால் கழுவ நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது. எங்கள் நிலையை எவரும் புரிந்துகொள்வதாத் தெரியவில்லை என்றார்.
மைக்கல் சரோஜின் (66):
காணிக்கு உறுதி வாங்கித் தருவதாக 2,500 ரூபா அறவிடுவது என்பது பற்றி யோசித் துப் பார்க்க வேண்டும். காணி மட்டுமே வழங்கப்பட்டது. இங்கு தேவையான வீதி, குடிநீர், மலசல கூடம், மின்சாரம் மற்றும் தேவைகள் குறித்து யாருமே கவலைப்படவில்லை.
வீடு எப்படிக் கட்டிக்கொள்வார்கள் என்பது பற்றியும் சிந்திக்கவில்லை. காணிக்கு உறுதி வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்ட போதிலும் இன்னும் உறுதி கிடையாது. வாங்கித் தருகிறோம்; வாங்கித் தருகிறோம் என சங்கத்தில் உரியவர்கள் சொல்கிறார்கள். அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான், சந்திசேகரன் போன்றோர் எமது நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
எஸ். புஷ்பராசா (32)
நான் எனது முயற்சியில் வீடு கட்டிக் கொண்டேன். இல்லாதவர்கள் எப்படி கட்டிக்கொள்வார்கள் எனக் கேள்வியெழுப்பினார்.

0 commentaires :

Post a Comment