3/07/2009

ரி.எம்.வி.பி. அமைப்பு இன்று அரசிடம் ஆயுதங்கள் கையளிப்பு







தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அமைப்பிலுள்ள இராணுவ பிரிவை கலைப்பது என்று ஏற்கனவே எடுத்த முடிவின் பேரில் இன்று மாலை உத்தியோகபூர்வமாக தம்மிடமிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளித்துள்ளது. மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற இது தொடர்பான வைபவத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னான்டோவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர் இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண பிரதிபொலிஸ் மா அதிபர் எட்வின் குனத்திலக்கா,மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீரசூரிய ,மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் ,மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்னானந்தராஜா ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்
தமது அமைப்பிலுள்ள இராணுவ பிரிவு இன்றுடன் கலைக்கப்பட்டு விட்டதாக இதற்க முன்னதாக இங்கு உரையாற்றிய அந்த அமைப்பின் ஊடக பேச்சாளரான ஆசாத் மௌலானா கூறினார் இதன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் மகாநாடொன்று நகர சபை மண்டபத்தில் நடை பெற்றது. இம் மகாநாட்டில் ஐ.நா வின் புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பான சர்வதேச அமைப்பின் உள்ளுர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் இலங்கையில் தமிழ் ஆயுத அமைப்பொன்று இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக ஆயுதங்களை கையளிக்கும் முதலாவது நிகழ்வு இதுவாகும். 1987 ம் ஆண்டு இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் படி விடுதலைப் புலிகள் மற்றும் ஈரோஸ் ஆகிய அமைப்புகள் ஆயுதங்களை கையளித்திருந்தாலும் அந்த கையளிப்பானது இந்திய இராணுவம் ஊடாகவே இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் கையளிக்கப்பட்;டது இக் காலப்பகுதியில் ஆயுதப் போராட்டத்தில் இல்லாத போதிலும் டெலோ ,ஈ.பி.ஆர்.எல்.எப். ,புளொட் ஆகிய அமைப்புகளும் வைபவ ரீதியாக ஏற்கனவே தம் வசமிருந்த ஆயுதங்களை இப்படி கையளித்திருந்தமை குறிப்பிடத் தக்கது மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் பிரதேசங்களில் சகல சபைகளையும் கைப்பற்றியதோடு நடை பெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இனைந்து போட்டியிட்டு தமது கட்சியைச் சேர்ந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக தெரிவாகும் வாய்ப்பை பெற்றிருந்தது. மட்டக்களப்பில் இன்று நடை பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுத கையளிப்பின் போது 56 துப்பாக்கிகள் ,சுமார் 6000 துப்பாக்கி ரவைகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பிலிருந்து வெளியாகிய தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு : ரி 56 ரக துப்பாக்கிகள் 52 அதற்கான மகசீன் 168, மற்றும் ரவைகள் 2106 எஸ்.எம்.ஜி. ரக துப்பாக்கி 01 ரி 81 ரக துப்பாக்கி 01 ஏ.கே.எல்.எம். ஜி. ரக துப்பாக்கிகள் 02, ஆர்.பி.ஜி. உட்பட ஷெல்கள் 46 வெளிச்ச குண்டுகள் 16 பி.கே. ரவுன்டஸ் 4650 கைக் குண்டுகள் 02 உட்பட பல்வேறு வகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன.



நன்றி - வீரகேசரி


0 commentaires :

Post a Comment