3/29/2009

கொழும்பு முஸ்லிம்களின் முற்றத்தில் புதையுண்டிருக்கும் சில முத்துக்கள்


கொழும்பு முஸ்லிம்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்; ஆவணப்படுத்தப்பட வேண்டும் அவற்றை அகழ்ந்து, கிண்டிக் கிளறி தொகுத்தாலே, தொடரும் பணிகளுக்கு துணை புரிவது போலாகும். பதச் சோறாக, சில முத்துக்களை ஆர்வலர்களின் சிந்தனைக்கு விருந்தாக்க விழைகின்றேன்.
கொழும்பு மருதானை தெமட்டகொடை தெருவில், இடநெருக்கடியால் மூச்சுத் திணறும் கைரியா முஸ்லிம் மகளிர் வித்தியாலயம், இலங்கை முஸ்லிம்களின் பாடசாலை வரலாற்றில் முன்னோடி பள்ளிக்கூடங்களில் ஒன்று. அது சமீபத்தில் தன் 125 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடி மகிழ்ந்தது. இப்பள்ளிக்கூட முற்றத்தில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான சம்பவமொன்று புதைந்து கிடைக்கின்றது. இதோ... அதன் விபரம் வருமாறு.
அல் மத்ரஸத்துல் கைரியா ஆரம்ப காலத்தில் இறைமறை குர்ஆனை ஓதிக் கொடுக்கும் ஒரு மத்ரஸா (பள்ளிக்கூடம்) பாணியிலேயே துவங்கப்பட்டு - நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இதனை மர்ஹும் லெவ்வை காக்கா என்ற பெரியாரே ஆரம்பித்திருக்கிறார். இப்பெரியாரின் மூன்று பெண்பிள்ளைகளான அக்கா, தங்கையரே கைரியாவின் வளர்ச்சியில் பெரும் கரிசனை காட்டி நடத்தி வந்துள்ளனர்.
இவ்வாறு கைரியா வளர்ந்து வரும் காலத்தில, இப்பள்ளிக்கூடம் வருங்காலத்தில் பெரிய தலையிடியாக வரலாமென்று தப்பெண்ணம் கொண்டு, எப்படியும் இந்த மத்ரஸாவை இங்கிருந்து அகற்றிவிட வேண்டும் என்று, “சரிந்த” பார்வையில் திரைமறைவு நடவடிக்கையில் ஈடுபடத் துவங்கியுள்ளனர் சிலர்.
இதே காலகட்டத்தில் பக்கத்தே இருக்கும் போதி மாதவனின் விஹாரையில் நடைபெறவிருந்த வைபவமொன்றுக்கு பிரதம அதிதியாக பெளத்த அமைச்சர் ஒருவர் அழைக்கப்பட்டிருக்கின்றார். விழாவுக்கு வருகைதரவுள்ள பிரதம அதிதியை மருதானை சந்தியிலிருந்து, தெமட்டகொடை ரோடு ஆரம்பமாகும் இடத்திலிருந்து ஊர்வலமாக அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி பகுதி மக்களுக்கு தெரியவந்ததில், கைரியா நிர்வாகிகளின் காதுகளுக்கும் எட்டியுள்ளது. மூன்று சகோதரியரில் ஒருவர் அரபு மொழியில் கீதமொன்றை இயற்றி, அதில் அதிதியாக வரவிருக்கும் அமைச்சரின் பெயரையும் சேர்த்து, ஒரு சிறுமியை மனனஞ் செய்யும்படி கூறி, அரபு கீதத்தை கொடுத்து ஏற்பாடு செய்துள்ளார். வைபவ நாளும் வந்து விட்டது. அமைச்சர் ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். கைரியா நிர்வாகம் என்ன செய்தது தெரியுமா?
அரபு கீதத்தை மனனஞ் செய்த சிறுமியை, கைரியா வாசலில் மேசையொன்றில் ஏறி நிற்கச் செய்து கத்தி பாடும்படி ‘திரிசிஷ்டர்ஸ்’ வேண்டவே, அந்தச் சிறுமி அவ்வாறே பாடிக்கொண்டிருக்க, ஊர்வலம் கைரியா அருகில் வந்துவிட்டது. மேசை மீது எழுந்து நின்று ஏதோ கத்திப்பாடும் சிறுமியை, பிரதம அதிதி கண்டு விட்டார். மொழி புரியாத அந்த அரபு பாடலில் உச்சரிக்கப்பட்ட அமைச்சரின் பெயர் தெளிவாக பிரதம அதிதியான அமைச்சரின் காதில் விழுந்துவிடவே, அவரது கவனம் திசைதிரும்ப, கைரியாவின் மீது பார்வை விழ, எவரும் எதிர்பாராத விதமாக, “மே மொனவாத தஹம் பாஸெலத?” எனக் கேட்டவாறே (இது என்ன சமயப் பாடசாலையா?) கைரியாவினுள் அமைச்சர் நுழைய அமைச்சரின் ‘பரிவாரங்கள்’ பின்தொடர, ஊர்வலம் கைரியாவை மொய்க்கலாயிற்று. விழா ஏற்பாட்டில் இல்லாதது, இறை ஏற்பாடாய் நடந்து விட்டது.
அமைச்சர் உள்ளே நுழைந்தபோது அங்கே மாணவர்கள் தொப்பி அணிந்தபடி, மாணவியர் முக்காடிட்டபடி குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும் காட்சியை கண்குளிர பார்த்தவாறே “ஆ... நடக்கட்டும்” என்ற ரீதியில் போன வேகத்திலேயே திரும்பி விட்டார். ஊர்வலம் விழா மேடையை அடைய வைபவம் களைகட்டி இனிதே நடந்து முடியும் தருணத்தில், அந்த “சிலர்” அமைச்சரை நெருங்கி, கைரியாவை காட்டி, ஏதேதோ சொல்லி, அதை அப்புறப்படுத்தித் தருமாறு வேண்டவே,
“ஏக்க மட்ட கரண்ட பே... ஏக்க தஹம் பாஸெலனே... ஏக்க பவ்வெடக்... மட்ட பே... “ (அது என்னால் செய்ய முடியாது... அது சமயப் பாடசாலையல்லவா? அது பாவமான காரியம்.. என்னால் முடியாது) எனக் கூறி மறுத்துவிட்டாராம் அமைச்சர்!
அமைச்சரின் அந்த மறுப்பே கைரியா கம்பீரமாக காலத்தை வென்று வளர்ச்சிபெற காரணமாயிற்று. இந்த சம்பவத்தை எழுத்துருவாக்கி, ஆவணப்படுத்தி வைக்க வேண்டாமா? நடந்த சம்பவங்கள் எழுதுவானாலும், அவை பேச்சளவில் இருந்தால், நாளடைவில் காற்றோடு கலந்து கரைந்து விடும். எழுத்துருவில் இருந்தால், என்றேனும் ஒருநாள் சான்றாக முன்வந்து சாட்சி கூறும்.
அம்மட்டோ? கொட்டாஞ்சேனை பகுதியில் சூ ரோட் என்றொரு தெரு இருக்கிறது. ஒரு காலத்தில் சப்பாத்து - செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் இத்தெருவில் குடியேறி வாழ்ந்ததால், இப்பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். இந்த சூ ரோட்டின் 100க்கு ஒரு வீதமானவர்கள் முஸ்லிம் அல்லாத தமிழ்ப் பேசும் இந்து – கிறிஸ்தவ சகோதரர்களே வாழ்கின்றனர். இப்படி முஸ்லிம் அல்லாத அன்பர்கள் 99 வீதமாக வாழும் ஒரு தெருவின் நடுவே, நீண்டகாலமாக ஒரு பள்ளிவாசல் (மசூதி) ஐங்காலத் தொழுகைகளை நடத்தியவாறு சமயப் பணி புரிந்து வருகிறது. சமீப காலத்தில் கட்டடப் புனர்நிர்மாணம் கண்டு ஒரு ஜும்ஆப் பள்ளிவாசலாக கம்பீரமாக எழுந்து நின்று, சன்மார்க்க மணம் வீசி வருகிறது. சுற்றுப் புறங்களிலும் அவ்வளவாக முஸ்லிம் குடியேற்றங்கள் இல்லாத நிலையில், 99 சதவீத தமிழன்பர்கள் வாழும் தெருவில் ஒரு பள்ளிவாசல் வந்தது எப்படி? இதை ஆய்ந்து - தோய்ந்து ஆவணப்படுத்தினால், உசாத்துணை தகவலுக்கு உதவுமே!
கொழும்பு முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஒரு பகுதி புதுக்கடையாகும். இந்தப் புதுக்கடையில் சில்வர் ஸ்மித் லேன் என்றொரு தெரு இருக்கிறது. இந்தத் தெருவில் முஸ்லிம்கள் சுமார் 98 சதவீதம் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒழுங்கையிலுள்ள தோட்டமொன்று தமிழ்ப்பேசும் இந்துக்களின் துர்க்கையம்மன் கோயில் கம்பீரமாக எழுந்து நின்று, தினமும் சமயப்பணி புரிந்து வருகிறது. பக்கத்தில் இன்னொரு கோயிலும் இருப்பது குறிப்படத்தக்கது. முஸ்லிம்கள் 98 சதவீதமாக வாழ்ந்துவரும் இத்தெரு தோட்டத்தில் ஒரு கோயில் வந்தது எப்படி? இதை ஆய்ந்து - தோய்ந்து ஆவணப்படுத்தினால், உசாத்துணை தகவலுக்கு உதவுமே! நீண்டகாலமாக சூரோட் பள்ளிவாசலும், சில்வர் ஸ்மித்லேன் கோயிலும் எவ்வித இடையூறுமின்றி சமய நல்லிணக்கத்திற்கு நல்ல உதாரணங்களாகத் திகழ்ந்து வருவதை எழுத்துருவில் ஆவணப்படுத்துதல் அவசியமல்லவா?
கொழும்பு மாளிகாவத்தை முஸ்லிம் ஜனாஸா நல்லடக்க மைதானத்தின் பென்னாம் பெரிய இடம், ஒரு முஸ்லிம் சமூகத்திற்காக அன்பளிப்பாகக் கொடுத்த காணி என்ற செய்தி, செழுங்கிளை தாங்கும் அந்த முஸ்லிம் செல்வந்தரின் விசால மனத்தின் விலாசமல்லவா? இந்த நல்ல செய்தியை நாளைய வாரிசுகளுக்கு சொல்ல வேண்டாமா? புறக்கோட்டை பகுதி தலைநகரின் பொலிவுக்கு பிரசித்தமான இடம். இப்பகுதியை “பெட்டா” என்றே பலரும் அழைக்கின்றனர். ‘பெட்டா’வுக்கு ஆங்கில அகராதி அர்த்தம் கூறவில்லை. “பேட்டை” என்பதே ‘பெட்டா’வாகத் திரிபடைந்திருப்பதாக ஒரு செய்தியுண்டு.
இத்தகவலை தெரிந்தவர்கள் சொல்ல, எழுத்தாக்க வேண்டாமா? இப்படி பல முத்துக்கள் கொழும்பு முஸ்லிம்களின் முற்றங்களில் புதைந்திருக்கின்றன. இவைகளை எழுத்தாக்க முனைவோமா?


0 commentaires :

Post a Comment