3/28/2009

கிழக்கு மாகாணத்தில் இன நல்லுறவு மேலோங்கியுள்ளது.




முஸ்லிம்கள், தங்கள் தேவைகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து கொள்ளுவதற்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமோக வெற்றியில் பங்காளர்களாக ஆகிவிட வேண்டும் என்று முன்னாள் எம்.பியும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸ¤ஹைர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தூரநோக்கற்ற தலைவர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதால் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையுமே கிடைக்கப் போவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் எதிரணியில் இருப்பவர்களே என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, ஏற்கனவே நடந்து முடிந்துள்ள மாகாண சபைத் தேர்தல்களைப் போன்று மேல் மாகாண சபைத் தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். இதில் ஐயமில்லை.
இந்நாட்டுக்கு இரு தசாப்தங்களுக்கும் மேலாக பெரும் தலையிடியாக இருந்த பயங்கரவாதப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சரியான தலைமைத்துவத்தையும், வழிகாட்டலையும் வழங்கி வருகின்றார். இதன் பயனாக கிழக்கு மாகாணம் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஜனநாயக கூட்டமைப்புக்கள் மீள ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மக்கள் அச்சம், பீதியின்றி நடமாடும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதே நிலமை வட மாகாணத்திலும் ஏற்படுத்தப்படும்.
நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மைகளைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மை சிங்கள மக்கள் முழுமையான ஆதரவை நல்குகின்றார்கள். கடந்த மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பரம்பரை சிங்கள வாக்காளர்களும் பங்காளர்களாகி இருப்பதை அவதானிக்கலாம்.
பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவென ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களைக் கெளரவிக்கும் வகையிலும், நன்றி செலுத்தும் வகையிலுமே அவர்கள் ஐ.ம.சு. முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்கின்றனர். இது மறுக்க முடியாத உண்மையாகும்.
இதேநேரம் இந்நாட்டில் இன வன்முறைகள் ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர்கள் முப்படையினர்தான். அதேபோல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏனைய சமூகத்தவரைப் போன்று முஸ்லிம்களும் அச்சம் பீதியின்றி நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுத்திருப்பவர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கும் முப்படையினரே ஆவர். பயங்கரவாதிகளால் வெளியேற்றப்பட்ட மூதூர் முஸ்லிம்கள் ஒரு மாதகாலத்திற்குள் மீளக்குடியமர்த்தப்பட்டார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாகத் தங்களது சொந்த விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாதிருந்த முஸ்லிம்கள் இப்போது அச்சம், பீதியின்றி செல்லும் நிலமை ஏற்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment