3/20/2009

ரி.எம்.வி.பியில் சிறுவர்கள் எவருமே இல்லை. கட்சியின் தலைவர் தெரிவிப்பு.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கின்ற அரசியல் கட்சியில் தற்போது சிறுவர்கள் எவருமே இல்லையென கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். ரி.எம்.வி.பியில் ஆரம்பத்தில் இணைந்து கொண்ட சிறுவர்கள் அனைவருமே விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று திருகோணமலை வெல்கம் ஹோட்டலில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் சந்திரகாந்தன்.
எமது அரசியல் கட்சியானது ஆரம்பத்தில் ஓர் வித்தியாசமான பாதையில் சென்று கொண்டிருந்தது. ஆனால் தற்போது நூறுவீத ஜனநாயகத்திற்குள் நுழைந்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது. இவ்வாறான ஓர் அரசியல் கட்சிக்கு இராணுவப் பிரிவோ அல்லது ஆயுதங்களோ அல்லது போராளிகளோ தேவையில்லை. எனவேதான் ஆரம்பத்தில் கிழக்கில் இருந்த ஒரு சில சிறுவர்கள் தங்களின் பாதுகாப்புக் கருதி எங்களது அமைப்பில் இணைந்திருந்தார்கள். அப்போது கிழக்கிலே பயங்கரவாதம் நிலைகொண்டிருந்தது. ஆனால் தற்போது அவ்வாறில்லை. எமது கட்சியும் புதியதோர் தலமைத்துவத்தின் கீழ் முழுமையான அரசியல் சிந்தனையோடும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டுவருகின்ற இச்சந்தர்ப்பத்திலே சிறுவர்கள் எமது அமைப்பில் இருக்கின்றார்கள் என்கின்ற தவறான கருத்துக்களை பலர் பரப்புகின்றனர்.உண்மையிலே எமது அமைப்பிலிருந்த அனைத்துச் சிறுவர்களும் யுனிசெப்பிடம் சமாதான அமைச்சின் நேரடி வழிகாட்டலின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். அச்சிறுவர்கள் தங்களது எதிர்கால வாழ்வாதார தொழில் மேம்பாடு கல்வி வளர்ச்சி என்பன தொடர்பாக முழுக்கவனத்தையும் அரசும், யுனிசெப்பும் இணைந்து மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் நீதி அமைச்சின் செயலாளர் சுகந்த ஹமலத், பிரதி பொலிஸ்மா அதிபர் ஹெட்சி ஆராச்சி, யுனிசெப் பிரதிநிதிகள், ரி.எம்.வி.பி கட்சியின் அரசியல் இணைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


0 commentaires :

Post a Comment