கடந்த 11 ம் திகதியில் இருந்து செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் அவசர சிகிச்சை தேவைப்படுகின்ற காயப்பட்ட மக்களை வெளியேறிச்செல்ல புலிகள் அனுமதித்து வருகின்றனர். இதுவரை பலநூறு காயப்பட்டவர்கள் ஐந்து தொகுதிகளாக திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய் அன்று முல்லைத்தீவு புது மாத்தளம் பகுதியில் இருந்து ஐந்தாவது தொகுதி மக்களுடன் "கிறீன் ஓசியாணி" என்கின்ற கப்பல் புறப்பட்டு திருகோணமலையை வந்தடைந்தது. இதில் வந்த 368 பேரில் 200 பேர் சிகிச்சைக்காகவும் மிகுதியானோர் 168 பேர் அவர்களின் பராமரிப்புக்காகவும் புலிகளால் பாஸ் கொடுக்கப்பட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டிருந்தனர். யுத்தத்தால் பாதிப்புற்று கைகால்களை இழந்த நிலையிலும் மிகக் கடுமையான காயங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும் மிக ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மட்டுமே புலிகள் அனுமதிக்கும் அளவிற்கு அவர்களது செயற்பாடுகள் இன்னும் மனிதாபிமானம் அற்றதாகவே காணப்படுகின்றது.
இறுதியாக வந்த கப்பலில் வந்திருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த (53 வயது) சிறிதட்சன் என்கின்ற வயோதிபர் திருகோணமலையை வந்தடைய முன்னரே இறந்துவிட்டார். இதேபோன்று இதுவரையில் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டவர்களில் 12 பேர் தமது உயிர்களை இழந்திருக்கின்றனர். தங்களால் வைத்து பராமரிக்க முடியாத தங்களுக்கு உதவாத நிலைக்கு வந்துவிட்ட மக்களை மட்டுமே எங்காவது போய் தொலைந்து போகட்டும் என்னும் நிலையில் புலிகள் பாஸ் கொடுத்து அனுப்புகின்றனர்.
மக்கள் மீது அக்கறைகொண்டதாக பேசுகின்றவர்கள், எழுதுகின்றவர்கள், குரல் எழுப்புகின்றவர்கள் முதலில் புலிகளது இந்த இரும்புப்பிடி தளர்த்தப்பட வேண்டும் என குரலெழுப்ப வேண்டும். அதுவே அந்த மக்கள் சார்பில் இருந்து பேசக்கூடியவர்களின் முதற்பணியாக இருக்க வேண்டும்.
0 commentaires :
Post a Comment