2/28/2009

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தொடரும் தற்கொலைகள்.



கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்கள், கற்பிக்கின்ற விரிவுரையாளர்கள், பல்கலைக் கழக நிருவாகம் மற்றும் சூழவுள்ளமக்கள் மத்தியில் ஓர் புது வித பீதி ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உப விடுதிக் காப்பாளராக கடமை புரியும் சித்தாண்டியைச் சேர்ந்த மாரிமுத்தன் பிரேமலதா(29) விடுதியின் உள்ளே தூக்கிட்டு மரணித்ததாக அறியமுடிகிறது. இது தற்கொலையா? அல்லது கொலையா? என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ் மரணம் தொடர்பில் இறந்தவரின் உறவினர்களுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்கள்.
இதன் பின்னர் நேற்று (26.02.09) கிழக்குப் பல்கலைக் கழக விடுதியில் தங்கியிருந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற கலைப்பீட முதலாம் வருட மாணவி செல்வி தனபாலசிங்கம் நீருஜா(23) யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு என்னும் முகவரியையுடைய இவர் தனது அறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டதாக பல்கலைக் கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுவும் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றார்கள். இவ்வாறாக இவர் இறப்பதற்கு முன்பு ஓர் கடிதம் எழுதிவைத்திருக்கின்றார். அக் கடிதத்தில் தனது உறவினர்கள் முல்லைத்தீவில் இருப்பதாகவும் அவர்களுடன் தன்னால் எதுவித தொடர்பினையும் ஏற்படுத்த முடியாது போனதாகவும் அதனாலே தான் தற்கொலை செய்வதாகவும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாக முதற் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
எது எவ்வாறாக இருந்தாலும் இத்துடன் இது போன்ற சம்பவங்கள் இடம் பெறக் கூடாது எனவும் இதன் பின்னணி என்ன என்பது தொடர்பான முழுவிசாரணைகளையும் நீதியான முறையில் பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றாhர்கள். இவ்வாறு தொடர்நது இடம் பெறும் மரணங்கள் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் ஒருவித அச்சம் தோன்றியிருப்பதனால் பல்கலைக் கழகத்தின் கலைப்பீடம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு; அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளியாகி இருப்பதாகவும் அறியமுடிகிறது.



0 commentaires :

Post a Comment