கருணா அம்மான் புலிகளில் இருந்து பிளவுபட்டு நின்றபோது கிழக்கு மாகாண மக்களின் தனித்துவ அரசியல் அடையாளங்கள் பற்றியே அந்த பிளவுக்கான நியாயங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்அடிப்படையிலேயே ரி.எம்.வி.பி. எனும் கட்சி உருவானதும், அதன் உருவாக்கத்தை கிழக்கு மாகாண மக்கள் தங்கள் அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக நோக்கியதும் உண்மையாகும். இதன் காரணமாக உள்ளுராட்சி சபை தேர்தல்களில் முதன் முதலாக களமிறங்கிய அக்கட்சியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச சபைகளையும் கைப்பற்றிதோடு மட்டக்களப்பு மாநகர சபையையும் கைப்பற்றியது. அதேபோல கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களிலும் ரி.எம்.வி.பி. யே ஆளுங்கட்சியாகும் வாய்ப்பு பெற்றதோடு கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரையும் தனதாக்கிக் கொண்டது. இவை அனைத்தையும் கிழக்கு மாகாண மக்களின் இருண்ட காலத்தை முடிவாக்கி ஓர் ஒளிமாயமான காலத்திற்கு இட்டுச்செல்லும் வெற்றிகளாக மக்கள் கருதினர். அதேபோன்று பல அபிவிருத்தித் திட்டங்களும் வேலைவாய்ப்புகளும் யுத்தமற்ற சூழலும் கிழக்கு மாகாண மக்களுக்கு எதிர்காலம் பற்றிய மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளன. இதைத் தொடர்ந்து அதிகாரப் பகிர்வுகள் சம்பந்தமாகவும் அரசியல் உரிமைகள் சம்பந்தமாகவும் ஒற்றுமையாக செயற்பட்டு மாகாணசபையை வலுப்படுத்த வேண்டிய தருணத்தில் ரி.எம்.வி.பி. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் அதன் தலைமைகளை வௌ;வேறு திசைகளில் பயணிக்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது. இது கிழக்கு மாகாண மக்களின் மனதில் மீண்டும் குழப்பங்களையும் மன விரக்திகளையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கடந்தவாரம் கொலைசெய்யப்பட்ட சரத்தீசனின் கொலை கூட கருணா அம்மானால் திட்டமிடப்பட்டதாக ரி.எம்.வி.பி. வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. இது மிக வேதனை தரும் விடயமாகும். அரசியல் முரண்பாடுகள் முற்றி வன்முறைக்கு வித்திடக் கூடாது. கட்சியின் போக்குக்கு மாறாக சுதந்திரமாக சிந்திப்பதற்கும் அதனை மக்களிடம் முன் மொழிந்து முன் எடுப்பதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. அதே போன்றுதான் ரி.எம்வி.பி.யின் கொள்கையில் இருந்து கருணா அம்மான் முரண்படுவது இயல்பானது. காரணம் அவர் இன்று அதிகாரப் பரவலாக்கம் பற்றியும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றியும் கொண்டுள்ள கருத்துக்கள் வித்தியாசமானவை. அவையெல்லாம் கிழக்கு மாகாண மக்களுக்கு அவசியம் இல்லையென்று அவர் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார். ஆனால் ரி.எம்.வி.பி. கட்சியோ இப்பிரச்சனைகள் குறித்து மாறான கருத்துக்களையே கொண்டிருக்கின்றது. இதன்காரணமாக கருணா அம்மான் விரைவில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவதற்கான ஏற்பாடுகள் ப+ர்த்தியாகி வருவதாக அறிய முடிகின்றது. சி.சு.கட்சியில் இணையும் அவரது முடிவுக்கு பல நியாயங்கள் அவருக்கு இருக்கலாம். அதை அவர் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து ரி.எம்.வி.பி. யின் முக்கியஸ்தர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் அவதூறு செய்து கேவலப்படுத்த முனைவதும், வன்முறைகளை பிரயோகிக்க முனைவதும் நாகரீகமற்ற செயற்பாடாகும். முதலமைச்சரையும், மேயரையும் மாகாணசபை உறுப்பினர்களையும் பற்றி இணையத்தளங்களின் ஊடாக பரப்பப்பட்டுவரும் செய்திகளை இட்டு மட்டக்களப்பு மக்கள் வெட்கித் தலைகுனிகின்றார்கள். மேயர் சிவகீதா பற்றி மிக மோசமான முறையில் கீழ்தரமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி அண்மையில் கருணா அம்மான் தரப்பில் இருந்து வெளியான செய்திகள் குறித்து மட்டக்களப்பு மாநகர புத்திஜீவிகள் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் எமது மக்களையே அவமானப்படுத்துகின்ற செயற்பாடாகும். எனவே இப்படி மூன்றாம் தர அரசியல் வழிமுறைகள் ஊடாக அரசியல் செய்யவும் தன்னை நிலைநிறுத்தவும் முனைவது பண்பும் அரசியல் நாகரீகமும் அற்றவர்களின் வெளிப்பாடேயாகும். அரசியல் போட்டிகளை கருத்துகளின் போட்டியாக மாற்றி மக்களிடம் எடுத்துச் செல்வதே ஜனநாயகத்தின் வழிமுறைகளாகும். அந்த வழிமுறைகளினூடாக நம்பிக்கை வைத்து செயற்படுவதே எல்லோருக்கும் சிறந்தது.
0 commentaires :
Post a Comment