2/22/2009

புலிகளே அப்பாவிப் பொதுமக்களை தயவுசெய்து வெளியேற அனுமதியுங்கள்.


உறவுப்பாலம் ஊடாக கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள்.
இன்று அதிகாலை இடம் பெற்ற ‘டன் தமிழ் ஒலி’ ஊடான உறவுப்பாலம் எனும் நிகழ்சச்pயிலேயே மேற்படி வேண்டுகோளை அமைச்சர் விடுத்துள்ளார். சுமார் 2 மணி நேரம் ஐரோப்பா வாழ் இலங்கையர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். இந்த நிகழ்சியில் கிழக்கு மாகாணசபையின் உருவாக்கம், அதன் பொறிமுறை கட்டமைப்புகள், வளர்ச்சிப்போக்கு பற்றியும் 13 வது சட்டத்திருத்தம் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி முயற்சிகள் என்பனவற்றையிட்டும் எழுப்பப்பட்ட நேயர்களின் கேள்விகளுக்கு விளக்கமாக அவர்களின் பதில்கள் அமைந்திருந்தன.
விவசாயம்: கடந்த யுத்தகாலங்களில் இலங்கையின் மொத்த நெல் விளைச்சலில் வெறும் 12 வீதம் மட்டுமே கிழக்கு மாகாணம் பங்களிப்பு செய்து வந்தது. ஆனால் இம்முறை தமது மாகாணசபையின் கடுமையான உழைப்பின் காரணமாக 30 வீதத்திற்கும் அதிகமான தேசியப் பங்களிப்பை கிழக்கு மாகாணம் செய்யவுள்ளது என்பதை அவர் எடுத்துக் கூறினார். அத்தோடு யுத்தகாலங்களில் கைவிடப்பட்டும் அநாதரவாகவும் தரிசு நிலமாக்கப்பட்ட காணிகள் அனைத்தும் இம்முறை செய்கைபண்ணப்படுவதாகவும் கிழக்கு மாகாணத்தில் 1 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இம்முறை விளைவிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு தமது அமைச்சரவை சார்ந்த விவசாய அமைச்சும், முதலமைச்சரும் மேற்கொண்ட பாரிய வேலைத்திட்டங்களே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி: அதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தேசியமட்டத்தில் முதல் மாணவி திருகோணமலையில் இருந்து தெரிவாகக் கூடிய நிலையும் யுத்தமற்ற குறைந்த பட்ச ஜனநாயகச் சூழல் நிலைநாட்டப்பட்டதினாலேயே சாத்தியம் என்பதையும் மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தால் பொருத்தமானதாய் இருந்திருக்கும்.
இனநல்லுறவு: அதேபோல இன உறவுகள் விடயத்திலும் தமிழ் - முஸ்லிம் நல்லுறவுகள் கிழக்கில் வலுப்பெற்று வருகின்றமையும் அதற்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் மேற்கொண்ட இனநல்லுறவுப் பணியக வேலைத்திட்டங்களும் மூவின மக்களின் பிரதிநிதிகளும் இணைந்து செயற்படுகின்ற மாகாணசபையும் இயங்குகின்றமையே காரணம் என்பதை பெருமையோடு தெரிவித்தார். அத்தோடு அதிகாரத்தில் உரிய பங்கு கிடைக்கின்ற போது முஸ்லிம்களின் தனி அலகு கோரிக்கை எழுப்;பப்பட வேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்த அவர் , இன்று இயங்குகின்ற கிழக்கு மாகாண சபையை அதற்கு முன்னுதாரணமாகக் காட்டினார்.
அதிகாரம்: கிழக்கில் பொம்மை அரசே இருப்பதாக வெளிநாடுகளில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பிரச்சாரம் பற்றிய கேள்வியொன்றுக்குஅவர் அளித்த பதில் காழ்ப்புணர்வுக் கதைகளை கட்டிவிட்டு பொம்மையரசு பற்றி கவிபாடி அகமகிழும் சிலரை நாணி கோண வைத்திருக்கும். அதிகாரம் பற்றிய சட்ட சிக்கல்கள் நியதிச் சட்டங்களை உருவாக்குகின்ற வழிமுறைகள் அதற்குரிய ராஜதந்திர முயற்சிகள்....... என்றவாறான ஜனநாயக அணுகுமுறைகள் பற்றி ஏதும் அறியாது ஒரே நாளில் கருத்தரித்து மறுநாளில் குழந்தை பெற்றுவிடக் கோரும் முண்டங்களுக்கு விளக்கமாக அவரது பதில் அமைந்திருந்தது.
ஒரு இடைச்செருகல்.: 2004 ஆம் ஆண்டு பெரியவெள்ளி தினம். வெருகல் ஆற்றுப்படுகொலை மேற்கௌ;ளப்படுகிறது. வடக்கே இருந்து வந்த அந்த வன்னிச் சூறாவளி காட்டுமிராண்டித் தனமாக பழிவாங்கியது. காயப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி கூட புலிகளால் எறிகணை வீசப்பட்டு தகர்த்தெறியப்பட்டது. அதே வேளை மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமை புரிந்த யாழ்ப்பாண வைத்தியர்கள் அனைவரும் கடமைக்கு வரக்கூடாது என்று வன்னியில் இருந்து புலிகளால் மிரட்டப்பட்டனர். இக்கொடுமைகளை வெளியுலகுக்கு எடுத்துச் செல்ல எந்தவிதமான மனிதநேய பணியாளர் அமைப்புக்களும் கிழக்கில் இருக்கவில்லை. அவர்கள் புலிகளின் கிழக்கு மீதான படையெடுப்புக்கு வழிவிட்டு வெறியேறியிருந்தனர். இப்படி எத்தனையோ அவலங்கள் தொடர்ந்தன. உலகமே கண்களை மூடியிருந்தது. உலகத் தமிழர்களின் ஒரு கரம் கூட உயரவில்லை. இந்த குரூர சம்பவங்களில் இருந்து கிழக்கு மாகாணம் மீண்டெழுந்து இன்று நிமிர்ந்து நிற்கிறது. எலிவளையானாலும் தனிவளை என்று தனது வழியில் தன்னால் முடிந்தவரை கிழக்கு மாகாணம் பயணித்து வருகிறது.
வன்னி அகதிகள்: திருமலையில் வந்து குவியும் காயமுற்ற அகதிகள் பற்றிய பல நேயர்கள் அமைச்சரிடம் வினவினர். கடந்த 11 திகதியில் இருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையாக நூற்றுக்கணக்கான அகதிகள் (இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள்) போர் இடிபாடுகளுக்குள் சிக்கி கைகால்களை இழந்தநிலையில் திருகோணமலையில் கொண்டுவந்து இறக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களும், சுகாதார அமைச்சர் ஆகிய தானும், மற்றைய அமைச்சர்களும் மூன்று தடவை நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளதாக தெரிவித்தார். அவர்களுக்கு வேண்டிய சகல அவசரத் தேவைகளையும் சத்திர சிகிச்சை, மருத்துவப் பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் குழந்தைகள் மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், குடும்பங்களை இழந்தும், பிரிந்தும் வந்திருக்கின்ற அந்த அகதிகளின் உள நல மருத்துவப் பணிகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முல்லைத் தீவில் இருந்து வருகின்ற மக்களை தமது சொந்தங்களாகவும் இரத்தங்களாகவும் உடன் பிறப்புகளாகவும் தாம் உட்பட மாகாணசபை நிர்வாகம் கருதி சகல உதவிகளையும் செய்துவருவதாக மனம் நெகிழக் கூறினார்.
இறுதியாக வன்னியில் இருந்து வெளியேறும் மக்களுக்கு உதவ கூட்டமைப்பு எம்.பி கள் முன்வரவில்லை. உலகத் தமிழர்களால் அவர்களுக்கு ஒரு பிடி சோறுகூட போடமுடியவில்லை. இந்த நிலையில் எந்தத் தனித்துவம் வேண்டாம் எனப்பட்டதோ, எந்தத் தேர்தல் நடக்கக் கூடாதெனப்பட்டதோ, இந்தப் பிள்ளையான் முதல்வராக முடியுமா என கூக்குரல் இடப்பட்டதோ அவைகள் எல்லாம் சாத்தியம் ஆனதால்தான் வன்னி மக்களின் அவல நிலையில் எம்மாலும் ஒரு கைகொடுக்க முடிந்ததென்று ஒவ்வொரு கிழக்குமாகாண மனிதனும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்று சொல்லிக்காட்டாது விட்டது அமைச்சரின் பெருந்தன்மையின் அடையாளம்.
“இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்”


0 commentaires :

Post a Comment