2/19/2009

இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தின் கிழக்கு மாகாண விஜயம் சொல்லும் செய்தி.


இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பு என்பது பிரிக்க முடியாதது. பின்னிப்பிணைந்தது. சரியானதா?, பிழையானதா?, ஆதிக்கமா?, ஆக்கிரமிப்பா?,

ஆலோசனையா? என்கின்ற விவாதங்களுக்கு அப்பால் ‘சுற்றிச் சுற்றியும் சுப்பர்ர வட்டைக்க’ என்பது போல் இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகள் இந்திய மத்தியஸ்தத்துடன் 1985 இல் திம்புவில் ஆரம்பித்து தாய்லாந்து , ஓஸ்லோ, ஜெனிவா மற்றும் இணைத்தலைமைகள் நாடுகள் என்று.... உலகமெல்லாம் சுற்றி மீண்டும் இந்தியாவில் வந்து 2009 இல் நிற்கிறது. இதற்கிடையில் இலங்கை தமிழ் அரசியல் வாதிகளில் இந்திய ‘றோ’ வுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பட்டியலும் அதற்காகவே கொல்லப்பட்டவர்கள் பட்டியலும் டெலோ தலைவர் சிறி சபாரெட்ணத்தில் தொடங்கி மாத்தையா அமிர்தலிங்கம் ஈறாக ரி.எம்வி.பி. தலைவர் நந்தகோபன் ரகு வரை ஒருபுறம் நீளுகிறது. எது எப்படியோ இன்று புலிகளும் கூட இலங்கைத் தமிழருக்கான ஒரோ நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியாவையே நம்பியிருக்கிறோம் என்று வெட்கத்தைவிட்டு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவை இராஜதந்திர ரீதியாக எப்படி அணுகி காரியத்தை எப்படி சாதிப்பது என்கின்ற வித்தையை இலங்கை அரசுடன் போட்டி போட்டுக்கொண்டு கற்றுக்கொள்வதிலேயே தமிழர்களுக்கான அரசியல் எதிர்காலம் தங்கியிருக்கின்றது. இந்த சுற்றுப்போட்டியில் களம் இறங்கி விளையாடவேண்டிய சந்தர்ப்பம் இன்று கிழக்குமாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு வந்திருக்கின்றது. மாகாண சபைகளுக்கான 13 வது சட்டதிருத்த அதிகாரப் பரவலாக்கங்கள், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் போன்றவற்றை இலங்கை அரசு இன்னும் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கவில்லை. அதற்குரிய அவசியம் இப்போது இல்லையென்ற மகிந்த கருதுகின்றாரா? அல்லது அதிகாரப் பரவலாக்கத்தை இழுத்தடிக்கும் பேரினவாதத்தின் சதியா? இதற்கு காரணம் என்பது ஒருபுறமிருக்க அதற்கான அழுத்தம் இதுவரை கொடுக்கப்படவில்லையென்பதே உண்மையாகும். துரதிஸ்டவசமாக ரி.எம்.வி.பி. தவிர்ந்த தமிழ்க் கட்சிகள் கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரம் குறித்து இதுவரை குரலெழுப்பவில்லை. அதே வேளை ரி.எம்.வி.பி. கூட கிழக்குமாகண சபையில் ஒரு பலவீனமான குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்தை வைத்துக்கொண்டே ஆட்சி நடத்துவதுவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் ராஜபக்ச அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எல்லையை மட்டுப்படுத்தியிருக்கின்றது. அதிலும் கருணா அம்மானின் வாயினாலேயே அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிரான கருத்துக்களை சொல்லவைப்பதில் அரசு வெற்றி கண்டிருக்கின்றது. பொலிஸ் அதிகாரமோ, 13 வது சட்டதிருத்த அதிகாரங்களோ தேவையில்லையென்று தெட்டத்தெளிவாக அவர் அறிக்கை விட்டிருக்கின்றார். இவையனைத்துக்கும் மத்தியில் முதலமைச்சர் சந்திரகாந்தன் மட்டுமே கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களைக் கோரி தனித்துக் குரலெழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார். இந்த நிலையில்தான் இந்திய தூதுவர் அலோக் பிரசாத் அவர்களின் கிழக்கு விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை வந்தபோது கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதை தவிர்த்திருந்தாலும் இன்று இந்தியத் தூதுவர் நேரடியாகவே கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்திருப்பது கிழக்குமாகாண சபை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினை எடுத்துக்காட்டுகின்றது. அதுமட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் அவர் நேரடியாகவே சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார். முதலமைச்சரை மட்டுமல்ல மாகாண அமைச்சரவையைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் மட்டக்களப்பு மாநகர மேயர் போன்ற பலதரப்பட்டோர் இடத்திலும் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றார். கிழக்கு மகாணசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அலோக் பிராசாத் அவர்கள் உரையாற்றுகையில் இந்தியாவின் ஆலோசனைகளுக்கமையவும் 13 வது சட்டத்திருத்தத்திற்கு அமையவும் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கான அதிகார பரவலாக்கத்திற்கு இந்தியாவின் உறுதியான ஆதரவு உண்டு என்று உறுதியளித்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதேபோன்று முதலமைச்சர் சந்திரகாந்தனும் தனது உரையில் இந்தியாவின் பங்களிப்புடன் உருவானதே இந்த மாகாணசபை என்பதையும் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் மக்களின் பிரதிநிதிகளால் அது நிர்வகிக்கப்பட தொடங்கியிருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டியதின் ஊடாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான இந்தியாவின் ஆதரவை கோரியிருந்தார். அலோக் பிரசாத் அவர்களின் கிழக்கு விஜயம் எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணசபை அதிகார ரீதியாக வலுப்பெறுவதற்கான அழுத்தங்களை இந்தியா மேற்கொள்வதற்கு வழிசமைக்கும் என நம்பப்படுகின்றது.

0 commentaires :

Post a Comment