2/28/2009

கல்முனை/ பெரியநீலாவணை விஷ்ணுவில் 4 ஆசிரியர், 29 மாணவர் திடீர் மயக்கம்


கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் 4 ஆசிரியர்கள் உட்பட 29 மாணவர்கள் திடீர் மயக்கம், மற்றும் உடல் அழற்சி காரணமாக மருதமுனை, கல்முனை ஆஸ் பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இதனால் பெற்றோர் பாடசாலைக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் பதற்றத்துடன் ஓடித்திரிந்தனர்.
பாடசாலைக்கருகேயுள்ள தோட்டத்தில் காய்கறிகளுக்கு விசிறிய கிருமிநாசினி காற்றோடு கலந்து பாடசாலை மேல்மாடியில் நின்றுகொண்டிருந்த மாணவர்கள் மேல் பட்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டது என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
மயக்கம், உடல் எரிவு, அழற்சி காரணமாக மருதமுனை வைத்தியசாலையில் 4 ஆசிரியர்களும் 23 மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் அனைவரும் வீடு திரும்பினர் என மருதமுனை ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது. மேலும், கல்முனை பெரியாஸ்பத்திரியில் இரண்டு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற சில வினாடிகளில் மாணவர்களின் பெற்றோர் ஆஸ்பத்திரியை நோக்கி அழுதவண்ணம் படையெடுத்தனர். சிலர் எங்கே எமது பிள்ளைகளை கொண்டு சென்றார்கள் எனத் தெரியாமல் கல்முனை அஷ்ரஃப் ஆஸ்பத்திரிக்கும் சென்று அழுது புலம்பினர்.
கல்முனை பெரியாஸ்பத்திரியிலுள்ள இரண்டு மாணவர்களைத் தவிர ஏனையோர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டனர்.
மாணவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதும், வைத்திய சாலை பொறுப்பதிகாரி டாக்டர் ஏ. ஆர். எம். ஹாரிஸ், டாக்டர் மெளலானா, டாக்டர் உவைசுல் பாரி ஆகியோர் கொண்ட குழுவினர், உடனடி சிகிச்சைகளை வழங்கினர்.



0 commentaires :

Post a Comment